அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முறைகேடு குறித்து வெளிக்கொணர்ந்து, அதனைப் பேசுபொருளாக்கித் தொடர்ந்து அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, இன்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான முன்னெடுப்புகளுக்குப் காரணமான அறப்போர் இயக்கத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.
விதிகளுக்குப் புறம்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பெயர்களைப் பதிவு செய்த 900 பேராசிரியர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் அண்ணா பல்கலைக்கழக ஆலோசனைக் குழுவின் முடிவு காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானாலும், இதனை உரிய முறையில் நடத்தி, இந்த விதிமீறலில் ஈடுபட்டுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மீதும் அதன் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்திடத் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகின்றேன்.
மேற்கூறிய விதிமீறலில் ஈடுபட்டப் பேராசிரியர்கள் குறித்தும் அதிகப்படியான விதிமீறலில் ஈடுபட்டக் கல்வி நிறுவனங்கள் குறித்தும் தெளிவாகவும் விரிவாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழி தகவல் திரட்டி, ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டு அதனை முதல்வர், ஆளுநர், தலைமைச் செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு 23.07.2024 அன்று அனுப்பி, சரியான நடவடிக்கைக்கு வழிவகுத்த அறப்போர் இயக்கத்தின் பங்கு அளப்பரியதாகும்.மென்மேலும் மக்களுக்கு எதிரான ஊழல் விதிமீறல்களை வெளிக்கொண்டுவந்து மக்களின் நலன் சார்ந்து இயங்கிட அறப்போர் இயக்கத்திற்கு என் வாழ்த்துகள்.
ஆண்ட, ஆளும் கட்சிகள் என்று பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில், எவ்வித அரசியல் தலையீடுமின்றி, உயர்கல்வி அமைச்சகம் முதல் உறுப்புக் கல்லூரிகள் வரை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த விதிமீறல்கள் மீது இத்தனைக் காலம் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளின் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய தண்டனை வழங்கிட வேண்டும்.
அரசு தன்னுடைய பணியை சரிவர செய்யாமல் ஒவ்வொரு முறையும் அறப்போர் போன்ற மக்கள் இயக்கங்கள் குரல் எழுப்பினால் தான் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றால் அரசு அமைப்புகள் மீது மக்களுக்கான நம்பிக்கை இல்லாமல் போய்விடும். மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற விதிமீறல்களின் மீது கவனமுடனும் துரிதமாகவும் அரசும் அதன் அதிகாரிகளும் செயல்பட்டிருக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் போனது ஆட்சி முறை திறனின்மையையே காட்டுகிறது. இனியும் காலம் கடத்தாமல் தமிழ்நாடு அரசு இச்சிக்கலில் கவனம் செலுத்தி அறப்போர் இயக்கம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளையும் சேர்த்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றேன்.