முத்தமிழ்ப் பேரறிஞர் வைரமுத்து அவர்களை அவமதிப்பது முத்தமிழை அவமதிப்பதற்கு ஒப்பாகும்! – சீமான் கடும் கண்டனம்

10

தமிழினத்தின் பெருமைக்குரிய அடையாளம் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படவிருந்த “முத்தமிழ்ப் பேரறிஞர்” எனும் பட்டத்தைப் பல்வேறு அரசியல் அழுத்தம் கொடுத்து “முத்தமிழ்ப் பெருங்கவிஞர்” பெயர் மாற்றி வழங்க திமுக அரசு நிர்பந்தித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

உலகிலேயே ஐயா கருணாநிதி ஒருவர் மட்டும் தான் முத்தமிழ் அறிஞரா? அவரைத்தவிர தமிழ் கற்ற அறிஞர் பெருமக்கள் வேறு யாரும் இல்லையா? ஒருவருக்கு மட்டுமே ஒரு பட்டம் இருக்க வேண்டும் என்று சட்டவிதி ஏதேனும் இருக்கிறதா?

பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி என்றெல்லாம் இருக்கும்பொழுது முத்தமிழ்ப் பேரறிஞர் வைரமுத்து என்று இருப்பதில் என்ன சிக்கல்? அதனை முத்தமிழ்ப் பெருங்கவிஞர் என்று மாற்றச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? இந்தப் பட்டங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் பட்டயம் போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா என்ன?

கவியரசு கண்ணதாசன் என்று இருக்கும்போதே கவியரசு வைரமுத்து என்று எப்படி பட்டம் வழங்கலாம் என்ற கேள்வி எழுந்த போது கவிப்பேரரசு வைரமுத்து என்ற பட்டத்தைச் சூட்டியது ஐயா கருணாநிதி அவர்கள் தானே? அதுமாதிரி முத்தமிழ் அறிஞராக ஐயா கருணாநிதி இருந்தால் முத்தமிழ்ப் பேரறிஞராக ஐயா வைரமுத்து இருப்பதில் என்ன உங்கள் பிரச்சினை?

திராவிடத்தலைவர்களின் புகழ் என்பது முழுக்க முழுக்கப் போலிப்பட்டங்களாலும், பொய்த்திட்டங்களாலும் கட்டமைக்கப்பட்டதுதான்!

மனிதர்களால் ஏற்கும் பட்டங்கள் பெருமையடைய வேண்டுமே தவிர; ஏற்கும் பட்டங்களால் மனிதர்கள் பெருமையடைந்துவிட மாட்டார்கள்.

காமராசர் அவர்களால் பெருந்தலைவர் என்ற பட்டத்திற்கே பெருமை சேர்ந்தது; அவரைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே உள்ளாட்சி மன்றத்தலைவர்களைப் பெருந்தலைவர் என்று அழைக்க ஆணையிட்டவர் ஐயா கருணாநிதி அவர்கள்தான். காரணம் பட்டத்தை மறைத்தால் புகழ் மறைந்திடும் என்ற திராவிடப் பொதுப் புத்தியால்தான்.

நாட்டில் எத்தனை ஆயிரம் பெருந்தலைவர்கள் வந்த பின்னும், இன்றைக்கும் பெருந்தலைவர் என்றால் அது காமராசர்தான் என்று அனைவரின் நினைவுக்கும் வருகிறார்கள். ஏனென்றால் பெருந்தலைவர் என்ற பட்டம் காமராசரால் பெருமைபெற்றது.

மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்குச் செய்யும் திட்டங்களான சாலை, பூங்கா, நூலகம், கல்லூரி, பல்கலைக்கழகம், மிருகக்காட்சி சாலை, பேருந்துநிலையம், தொடர்வண்டிநிலையம், வானூர்தி நிலையம் என எதுவொன்றிலும்
தம்முடைய பட்டப்பெயர்களைச் சூட்டுவதற்கு நடக்கும் போட்டிதான் ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சி!

தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட தளபதி என்ற பட்டம் தன்னைத்தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது என்று மிரட்டிய திருவாளர்கள்தான் திராவிட மாடல் பெருந்தகைகள்!

ஆனால், இவர்கள் மட்டும் ஆரூர் சோழனே என்றும், நெடுஞ்செழியப் பாண்டியனே என்றும், சேரன் செங்குட்டுவன் என்றும், வாழும் வள்ளுவரே, வாழும் பாரியே என்றெல்லாம் தமிழ் முன்னோர்களின் பெயர்களைத் திருடி சூட்டிக்கொள்வார்கள்!

ரோம் பேரரசு வீழ்ந்தது;
கிரேக்கப் பேரரசு வீழ்ந்தது;
பிரிட்டிஷ் பேரரசு வீழ்ந்தது;
மௌரியப் பேரரசு வீழ்ந்தது;
மராத்திய பேரரசு வீழ்ந்தது;
முகலாயப் பேரரசு வீழ்ந்தது;
விஜயநகரப் பேரரசு வீழ்ந்தது;
ஏன் எங்கள் முன்னோர்களின் சோழ, சேர, பாண்டியப் பேரரசுகளும் வீழ்ந்தன;

ஆட்சியும், அதிகாரமும் ஒருபோதும் நிலையானதல்ல!

அசைக்க முடியாத வலிமையோடு திகழ்ந்த அத்தனை பேரரசுகளும் மண்ணோடு மண்ணாக வீழ்ந்து போனதை வரலாறு நெடுகிலும் காண்கிறோம்! போலி திராவிடப் பொய்யரசு எம்மாத்திரம்?

முத்தமிழ்ப் பேரறிஞர் ஐயா வைரமுத்து அவர்களையும், அவர் அள்ளித்தந்த தமிழையும் அவமதித்த உங்களின் அதிகாரத்திமிரும் ஆணவமும் ஒருபோதும் நிலைக்காது! விரைவில் வீழும்!

‘தண்ணீர்! தண்ணீர்!’ முதல் ‘மகா கவிதை’ வரை நாம் வாழும் நிலத்தையும், நம்மை வாழ்விக்கும் சூழலையும் காக்கும் அக்கறை கொண்ட புவியியல் நிறுவிய ஆய்வு முடிவுகளைக் கவியியலில் தந்து விழிப்புறவும், களிப்புறவும் செய்த பெரும்பாவலர் ஐயா வைரமுத்து அவர்களை அவமதிக்கும் நிகழ்வை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

தமிழர் பண்பாட்டுச் செழுமையையும், வரலாற்றுப் பெருமையையும் கூறும் இயல் நூல்கள், தமிழின் இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் பொதிந்த பல்லாயிரம் தமிழ் இசைப்பாடல்கள், தமிழ் மண்ணின் வாழ்வியலையும், மரபியல் கூறுகளையும் பின்னிப் பிணைந்து எழுதிய காவிய நாடகங்கள் என முத்தமிழிலும் கரை கண்ட ஐயா வைரமுத்து அவர்களே இப்பட்டத்தை ஏற்க மறுத்தாலும் அவர் முத்தமிழ்ப் பேரறிஞர் தான்!

https://x.com/Seeman4TN/status/1821521805732983292

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஉலகப் பழங்குடியினர் நாள் 2024! – சீமான் வாழ்த்து