போதை பொருள் கடத்தல் வழக்கு விசாரணை குறித்து செய்தி சேகரித்த பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான திமுகவினரின் தாக்குதல், ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்

225

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து செய்தி சேகரிக்க சென்னை நுங்கம்பாக்கம் காம்டா நகர் சென்ற பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி அ.செந்தில்குமாரை திமுக அடியாட்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த களத்திற்கு நேரடியாக சென்று செய்தி சேகரித்து உலகிற்கு சொல்வது சனநாயகத்தின் நான்காவது தூண்களான ஊடகத்துறையின் அடிப்படை கடமையும், உரிமையுயாகும். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில் ஆளும் திமுகவினர் அதனை அனுமதிக்க மறுத்து, ஊடகவியலாளர்களைத் தாக்குவதென்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஊடகவியலாளர்கள் மீதான இத்தகைய கொடுந்தாக்குதல்கள் தொடர்கதையாகிவிட்டது.

பாஜக ஆளும் வட மாநிலங்களில் ஊடகவியலாளர்களை தாக்கி ஊடகங்கள் மீது நிகழ்த்தப்படும் அதே பாசிச அணுகுமுறையை தமிழ்நாட்டில் திமுக அரசும் கடைபிடிப்பதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
கருத்துச் சுதந்திரம் குறித்து பாடமெடுக்கும் திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள், சமூகநீதி பேசும் சனநாயகவாதிகள், மனித உரிமை காக்கும் மாண்பாளர்கள், கருத்துரிமை காவலர்கள் திமுகவின் அதிகார அத்துமீறலை கண்டிக்க இப்போதாவது வாய்திறப்பார்களா? அல்லது வழக்கம்போல் வாய்மூடி மௌனிப்பார்களா? திமுக அரசிற்கு எவ்வித அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக உண்மையை மறைக்க ஊடகவியலாளர்களை திமுக நிர்வாகிகள் தாக்குவதென்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

ஆகவே, பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி அ.செந்தில்குமார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுகவினரை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1763279797591892221?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதருமபுரம் ஆதினத்தின் மீது அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்த பாஜக, திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!