நியூஸ் தமிழ் ஊடகவியலாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! – சீமான் கண்டனம்

500

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைகளை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியுள்ள திமுகவினரின் கொலைவெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆடு, மாடுகளைப்போல மக்களை அடைத்து வைத்து, அவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பறித்து, மக்களாட்சி முறைமையையே குழிதோண்டிப் புதைக்கும் ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்குதான், தற்போது உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது. திமுக குண்டர்கள் ஊடகவியலாளர்களையே மிரட்டித் தாக்குகிறார்கள் என்றால், அப்பாவிப் பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார்கள்? என்பதைத் தேர்தல் ஆணையம் இனியாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆளும் திமுகவினரின் இத்தகைய சனநாயக விரோதச் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், நியூஸ் தமிழ் தொலைக்காட்சி ஊடகவியாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– சீமான்

முந்தைய செய்திடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை ஈரோடு கிழக்கு ( 21-02-2023 )