#நூல்_பரிந்துரை 07
#வீரப்பன்_பெயரால்_மனிதவேட்டை
தமிழ்த் தேசியத் தலைவர் எங்கள் இனக்காவலன். எல்லைக்காத்த மாவீரன் ஐயா வீரப்பன் அவர்கள் எங்கள் வனக்காவலன் என்கிற எமது முழக்கத்துக்கு ஏற்ப, வீரத்திற்கே அப்பனாக வாழ்ந்த எமது எல்லைக் காவலர் ஐயா வீரப்பன் பெயரைச் சொல்லி எளிய மக்கள் மீது அதிகார ஆணவத்தோடு மேற்கொள்ளப்பட்ட கொடும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் பட்ட வலிகளையும், துன்புறுத்தல்களையும் அவர்களது மொழியிலேயே பதிவு செய்துள்ளார் எனது ஆருயிர் இளவல் பாலமுரளி வர்மன்.
வனத்தை ஒட்டிய சிற்றூர்களில் வாழும் மக்களின் இயல்பையும், வாழ்வியல் முறைகளையும் தனது அளப்பரிய எழுத்தாற்றலால் மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். படிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அடர்த்தியான உண்மைகள் அடங்கியதொரு காலத்தின் பதிவு. தம்பி பாலமுரளிவர்மன் தனது கள ஆய்வின் மூலம் கண்ட காட்சிகளையும் கேட்ட சாட்சிகளையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்.
எழுத்துகளிடையே கசிகிறது எம் மக்களின் குருதி. வரிகளில் வழிகிறது வனத்தின் கண்ணீர். சொற்கள் சுமந்திருப்பவை அனைத்தும் இதுவரை சொல்லப்படாத உண்மைகள்.
இந்நூலின் வாயிலாக எழுப்பப்படும் மதிப்புமிக்க வினாக்களை தமிழ்ச்சமூகம் புறந்தள்ளி விட முடியாது. அடக்குமுறை காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களோ ஆட்சியில் இருந்தவர்களோ பதில் சொல்லவில்லை; சொல்லவும் மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு ஆளும் வாய்ப்பை வழங்குகிற மக்கள் தமது பொறுப்பை உணர்ந்தாலே இத்தகைய கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் எளியோர் எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது. நம்மை யார் ஆள வேண்டும் என்கிற தெளிவு தமிழர்களுக்கு வந்து விட்டால் இது போன்ற துயரங்கள் நேராது என்கிறார் தம்பி பாலமுரளி வர்மன்.
என் உயிர்க்கினிய தம்பி-தங்கைகள் மற்றும் பேரன்பிற்குரிய உறவுகள் அனைவரும் வாங்கிப்படிக்கவேண்டிய புத்தகமிது!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



