முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், தமிழர்களின் அறிவார்ந்த கடல்…

1

தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், தமிழர்களின் அறிவார்ந்த கடல் ஆளுகை திறனை தமது ஆய்வின் மூலம் நிறுவிய பெருந்தகை, உலக தமிழர்களால் ஒரிசா பாலு என்று அன்போடு அழைக்கப்படும் ஐயா உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனத்துயரமும் அடைந்தேன்.

ஐயா ஒரிசா பாலு அவர்கள் தமது 25 ஆண்டுகால ஆய்வுகளின் மூலம் ஆமைகளின் தொலையுணர்வு, பருவக்காற்று, கடல் நீரோட்டம், பறவைகளின் இடப்பெயர்வு
குறித்து ஆராய்ந்து அதன் மூலம் தமிழர்களின் தொன்மம், கப்பல் தொழில்நுட்பம், கடற்பயணங்கள், வணிகம், உலகத் தொடர்புகள், குறித்த பல வரலாற்றுச் செய்திகளை நிறுவிய பெருமைக்குரியவர்.

குமரிக்கண்டம் குறித்தும்,
உலகெங்கிலும் தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும் இடங்கள் குறித்தும் ஐயா ஒரிசா பாலு அவர்கள் ஆய்ந்தறிந்து கூறிய உண்மைகள் யாவும் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த தொன்மப்பேரினம் என்பதற்கான காலத்தால் அழியாத பெருமிதச் சான்றாகும்.

தமிழர் வரலாற்று பேராவணங்களாக திகழும்
ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, 2000க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழர் வரலாற்று பெருமைகளை உலக்கெங்கிலும் கொண்டு சேர்த்த புகழுக்குரியவர். பண்டைய தமிழர் வாழ்வியல், வரலாறு, பண்பாடு, தொல்லியல், மொழியியல், மெய்யியல், தொழில்நுட்பவியல், வேளாண்மை, வணிகம், மருத்துவம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐயா அவர்கள் செய்த ஆய்வுகளும், உலகின் முன் நிறுவிய உண்மைகளும் உலகத்தமிழர்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுக்கூரப்படும்.

என் மீது பேரன்பு கொண்ட ஐயா ஒரிசா பாலு அவர்கள் நான் நெறியாளுகை செய்த 'மக்கள் முன்னால்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழர் தொன்ம வரலாறு குறித்து பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட நினைவுகள் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது. நாம் தமிழர் கட்சி நடத்திய பல்வேறு தமிழ்த்தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்பாளராக மட்டுமல்ல பார்வையாளராகவும் பங்கேற்று பெருமை சேர்த்த பெருந்தகை.

தமிழர்கள் பழம்பெருமை பேசுவதன் மூலமே, இழந்த தம் ஈடு இணையற்ற பெருமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்த பேராசான் ஐயா ஒரிசா பாலு அவர்களின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு மிகநெருக்கமான ஐயா ஒரிசா பாலு அவர்களின் இழப்பு உலகத்தமிழ் பேரினத்திற்கே ஏற்பட்டுள்ள ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.

தமிழின தொன்ம வரலாற்று அறிவுப்பெட்டகம் ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபகைவனால் ஏற்படும் தீமையைவிட, அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான…
அடுத்த செய்திதிருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர்…