நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் “நிலவேம்புச்சாற்றினை” பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் அறிவுறுத்தல்

63

என் உயிர்க்கினிய தம்பி, தங்கைகளுக்கு அன்பு வணக்கம்..!

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழத் தொடங்கி இருப்பது மனவேதனை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட இன்னபிற தொற்றுநோய்கள் பரவி மக்களின் உடல் நலனுக்கும் உயிருக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. அத்தகைய துயரிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது ஆளும் அரசினது முழுமுதற் கடமையாகும். எனினும், தமிழ் மண்ணின் மீதும், இனத்தின் மீதும் பெரும்பற்றுக் கொண்டு மக்கள் நலன் காக்க, அரசியல் களத்தில் அயராது பாடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி, ஒவ்வொரு ஆண்டும் நோய்த் தொற்றுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க தம்மால் இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் மழைக்காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் எனது பேரன்பிற்குரிய தம்பி-தங்கைகள், அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரவர் பகுதிகளில் முகாம்களை அமைத்து டெங்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும், நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் “நிலவேம்புச்சாற்றினை” பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன்.

அத்தோடு, காய்ச்சல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகளையும், நமது வீடுகளில் காலங்காலமாக உணவில் பயன்படுத்தி வந்த “கருஞ்சீரகம்” போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வையும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

 

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி