வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க திமுக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

155

வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க திமுக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. கடந்த 3 மாதங்களாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. டெங்கு காய்ச்சலிலிருந்து காக்கும் வழிமுறைகள் தெரியாமல் மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.

மதுரையில் 50 பேர், புதுக்கோட்டையில் 37 பேர், கடலூரில் 10 பேர், கரூரில் 6 பேர், திருவாரூரில் 11 பேர், கும்பகோணத்தில் 3 பேர், திருவண்ணாமலையில் 5 பேர், மதுரையில் 12 பேர் என தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் இரண்டு இளம்பெண்கள் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், காய்ச்சல் வேகமாகப் பரவவில்லை என்றுகூறி மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அணுகுமுறை மிகத்தவறானது. குழந்தைகள் உயிர் பறிபோனாலும் பரவாயில்லை, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைப்பது கொடுங்கோன்மை மனப்பான்மையாகும். அண்டை மாநிலமான கர்நாடகாவில் 7000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு உடனடியாகத் தீவிர தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

எனவே, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, மருத்துவர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை உடனடியாக அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர், உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திகெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திநோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் “நிலவேம்புச்சாற்றினை” பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் அறிவுறுத்தல்