சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான்

100

சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான்

 

அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. . இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தையே நீதிமன்றங்களில் வைப்பதை தவிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரைவிடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் இவ்வறிவிப்புத் தோன்றுகிறது.

 

சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும். அவர் வகுத்தளித்த அரசியலைப்பு சட்டத்தின் ஆட்சி இந்த நாட்டில் நடைபெறும்வரை, அண்ணல் அம்பேத்கர் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பெயரையோ, புகழையோ எவராலும் மறைக்க முடியாது.

 

ஆகவே, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திசிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! – திருவள்ளூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திசென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்