இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்! – படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து!

49

*இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்!*

 

’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்டேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்ட மண்ணையும் மக்களையும் அங்குள்ள சிக்கல்களையும் அதனதன் இயல்பு மாறாமல் இப்படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பது கண்டு மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்.

 

’இராவண கோட்டம்’ எனத் தலைப்பிட்டு, இது போன்ற ஒரு கதைக்களத்தை திரைப்படமாக்கத் தெரிவு செய்யவே தெளிவான புரிதலும் துணிவும் வேண்டும். அத்தகைய தெளிவோடும் துணிவோடும் இது திரைப்படமாக வேண்டிய தேவையையும் நோக்கத்தையும் அடைகாத்து, தரமான ஒரு படைப்பாக்கித் தந்துவிட்ட என் அன்புத் தம்பி இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களை உளமாரப் பாராட்டுகிறேன்.

 

இராமநாதபுரம் மாவட்டத்தின் நிலவியல் தன்மைக்குள் கதை மாந்தர்களாக நடிகர்களைப் பொருத்திய விதம், இராவண கோட்டத்தின் நேர்த்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், இயக்குநர், எனத் துறை சார்ந்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் இப்படைப்பிற்காக அவரவரின் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

 

பசுமை படர்ந்த நிலக் காட்சிகளை அழகுறக் காட்சிப்படுத்துவது எளிது. ஆனால், இதுபோன்ற வறண்ட நிலப்பரப்பின் காட்சிகளை அதன் இயல்பு கெடாமலும் அதே நேரம் இரசிக்கும்படியும் படமாக்குவது சவால்கள் நிறைந்தது. அவ்வகையில் காட்சிகளின், கதை மாந்தர்களின் போக்கறிந்து நிலவியலையும் ஒரு கதாப்பாத்திரம் போலக் காட்சிகள் எங்கும் நிறைத்திருக்கிற ஒளிப்பதிவாளர் அன்புத் தம்பி வெற்றிவேல் மகேந்திரன் அவர்களுக்கும் இதற்காக அவருக்குத் துணையாக இருந்த ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனைக் கலைஞர், கலை இயக்குநர், ஆகியோருக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.

 

உருக்கமான காட்சிகளிலும் சரி; பரபரப்பான சண்டைக் காட்சிகளிலும் சரி; அதனதன் உணர்வுகள் குலையாமல் சரியாகப் பார்வையாளர்களுக்குள் கடத்திவிடுகிறது லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு. இயக்குநரின் உணர்வோடு ஒத்து பயணித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். படத்தொகுப்பாளர், தம்பி லாரன்ஸ் கிஷோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

 

உண்மைக்கு நெருக்கமான இதுபோன்ற கதைக்களத்தில் நிகழும் சண்டைக் காட்சிகள், அசலானவையாக இருந்தால் மட்டுமே படத்தின் நம்பகத் தன்மை கூடும். இந்த பொறுப்புணர்ச்சியின் எல்லை புரிந்து சண்டைக் காட்சிகளைத் திறம்பட அமைத்திருக்கிற தம்பி ராக் பிரபு அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

 

தம்பி ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்கூட கதை சொல்லிகளாக அமைந்திருப்பது இராவண கோட்டத்திற்குப் பெரும் பலம். இசையமைப்பாளர் தம்பி ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும், உணர்வுப் பூர்வமான பாடல்களை மண்ணின் மணம் கூட்டி எழுதியுள்ளப் பாடலாசிரியர்கள், ஏகாதசி மற்றும் கார்த்திக் நேத்தா ஆகியோருக்கும் பேரன்பின் பாராட்டுகளும் உளம் நிறைந்த வாழ்த்துகளும்.

 

’இராவண கோட்டம்’ திரைப்படத்தை தான் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தால் ஒரு தூண்போலத் தாங்கி நிற்கிறார் என் அன்பு அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்கள். தம்பி விக்ரம் சுகுமாரனால் உருவாக்கப்பட்ட கதாப் பாத்திரங்களைச் சரியாக உள்வாங்கி அவற்றுக்குத் தங்களின் ஈடு இணையற்ற இயல்பான நடிப்பாற்றலால் உயிருட்டியிருக்கும் என் அன்பு அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்களையும், பேரன்பு மிக்க மாமா இளவரசு அவர்களையும், வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்.

 

கதை நாயகியாக ஆனந்தியும், உடன் நடித்திருக்கிற தீபா சங்கர், பருத்தி வீரன் சுஜாதா, ஆகியோரும் தத்தமது சரியான நடிப்பாற்றல்களை வெளிப்படுத்தி காட்சிகளின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறார்கள். எதிர்க்கதாப்பாத்திரம் ஏற்று வரும் முருகனின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்குப் பெரும் பலமாக அமைகிறது. அதுபோலத் தம்பி அருள்தாஸ், தேனப்பன், ஷாஜி, ஆகியோர் ஏற்ற பாத்திரங்களும் அவற்றுக்கான அவர்களின் நடிப்பும் படத்தில் குறிப்பிடத் தகுந்தது. இராவண கோட்டத்தில் இவர்களின் சிறப்பான பங்களிப்பிற்காகப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

 

இராவண கோட்டத்தின் நாயகனாக வரும் தம்பி சாந்தனு அவர்களை ஒரு முழுமையான நடிகனாக நான் இப்படத்தில் கண்டேன். காதல், கோபம், ஏக்கம், பாசம், நட்பு, விசுவாசம், எனப் பலதரப்பட்ட உணர்வு நிலைகளில் காட்சிக்குக் காட்சி அவரின் நடிப்பாற்றல் நிறைவைத் தந்தது. இப்படத்தில் நடித்ததன் வாயிலாக ஒரு சமூகப் பொறுப்புணர்வு மிக்க கலைஞனாகவும் நிலை உயர்ந்துள்ளார் சாந்தனு. தம்பி சாந்தனு இதுபோலச் சமூகப் பொறுப்புமிக்கப் படைப்புகளில் தொடர்ந்து நடித்து மேலும் பல உயரங்களை அடைய நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

 

இப்படி ஒரு கதைக்களத்தை தயாரிக்க முன் வந்ததோடு, அது திரைப்படமாக முழுமை பெற்று வெளியாகச் செய்த தயாரிப்பாளர் இரவி கண்ணன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளும் பேரன்பின் வாழ்த்துகளும்!

 

பல்லாண்டுகளாக நாம் பேசி வருவதும் மரங்களின் பிசாசு என்றழைக்கப்படுவதுமான சீமைக் கருவேல மரங்கள், ’உயிர்ச்சூழல் கெடுக்கும் பேரிடர்’ என்பதைப் போகிற போக்கில் ஆழமாகப் பதிவு செய்கிறது இராவண கோட்டம் திரைப்படம். சீமைக் கருவேல மரங்களால் நிகழும் கேடுகள் பற்றியும் நிகழவிருக்கும் வருங்காலப் பேராபத்துகள் குறித்தும், சூழியல் அக்கறையோடு பதிவு செய்கிறது, இராவண கோட்டம்.

 

வரலாற்றில் நேர்ந்துவிட்ட பிழைகளால் தமிழர்களை ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்ட ஆட்சியாளர்களுக்கு, தமிழர் வாழ்வு குறித்தோ வருங்காலம் பற்றியோ துளியும் அக்கறை இல்லை என்பதையும், அதிகாரத்தை தக்க வைக்க அவர்களால்தான் சாதியப் பிரிவினை உணர்ச்சிகள் திட்டமிட்டு புகுத்தப்பட்டுத் தமிழர்கள் பிரித்தாளப்படுகிறார்கள் என்பதையும் இராவண கோட்டம் தெளிவாக எடுத்துக்காட்டி நிறுவுகிறது.

 

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வைப் பதிவு செய்யும் ’கரிசல் இலக்கியங்கள்’, காகிதங்களில் படைக்கப்பட்ட அளவிற்கு திரைப்படங்களில் இல்லையே என்ற என் நெடுநாள் ஏக்கம் ’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்ட பிறகுப் பெருமளவு தணிந்தது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து இம்மண்ணின் நிலவியலையும் வாழ்வையும் திரைப்படங்களாகப் பதிவு செய்ய இப்படம் ஒரு முன்னோடியாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இப்பெரும் படைப்பிற்கு கதை, திரைக்கதை, உரையாடல், எழுதி, இயக்கிய என் அன்புத் தம்பி விக்ரம் சுகுமாரனுக்கு மீண்டும் என் பேரன்பின் முத்தங்களும் மனம் நிறைந்த பாராட்டுகளும்.

 

இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வர, உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் உடனடியாக இராவண கோட்டம் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துப் பேராதரவு தர வேண்டும் எனப் பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

இராவண கோட்டம்; தமிழர் நாட்டம்!