80 ஆவது அகவை தினத்தில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் வரலாற்றுப் பேராய்வாளர் ம.சோ. விக்டர் அவர்களை வணங்குகிறேன்! – செந்தமிழன் சீமான்

138

80 ஆவது அகவை தினத்தில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் வரலாற்றுப் பேராய்வாளர் ம.சோ. விக்டர் அவர்களைப் போற்றி வணங்குகிறேன்! – செந்தமிழன் சீமான்

வரலாற்று பேராய்வாளர் ஐயா தக்கார்.ம.சோ. விக்டர் அவர்கள் இன்றைய தினத்தில் (24-05-2023) தன்னுடைய 80 வது அகவை தினத்தில் அடியெடுத்து வைப்பதை நினைத்து அகம் மகிழ்கிறேன். அரியலூர் அருகே உள்ள வரதராஜன் பேட்டை என்னும் சிற்றூரில் பிறந்து, பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, தமிழர் வரலாற்று ஆய்வுகளின் மீது கொண்ட ஈடுபாட்டினால், பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் கடந்த நிலையில் எழுத்துப்பணிக்காக விருப்ப ஓய்வு பெற்றவர்.

தமிழர் நிலத்தில் அருகிவரும் வரலாற்றுத் தேடல்களைத் தனது கடுமையான உழைப்பினால் பெருகச்செய்து, 150க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை உருவாக்கி வழங்கியுள்ளார். வரலாற்றில் தனித்த மனிதர்களின் புகழ் பாடாமல், மொழியினை, அதன் வேரினை, அதன் நீட்சியாகத் தமிழர் சமுதாயத்தின் வாழ்வினை, அதனோடு தொடர்புடைய வரலாற்றைத் தெளிவாகப் பதிவு செய்தவர் ஐயா ம.சோ. விக்டர் அவர்கள். வரலாற்றுத்தளத்தில் எவரும் மறுப்பு சொல்ல முடியாத ஆய்வுகளை அதன் தரவுகளோடு எடுத்து வைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

தொடர்ச்சியாக ஒரு மனிதன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுப்பணியிலும், எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்பது இயலாத காரியம், அவற்றைச் சாத்தியப்படுத்திய சாதனையாளர் ஆய்வறிஞர் ம.சோ. விக்டர் அவர்கள். தன்னுடைய அகவையோட்டத்தில் அமுதவிழா (80 ஆண்டுகள்) காணும் ஐயா ம.சோ. விக்டர் அவர்களைப் போற்றி வணங்குவதில் பெருமிதமடைகிறேன். தமிழ்ச்சமூகத்தின் ஒரு நடமாடும் வரலாற்று அறிவுப் பெட்டகத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

குன்றா உடல்நலத்தோடும், ஆற்றலோடும் இந்தத் தமிழ்ச்சமூகம் வரலாற்று மீளெழுச்சி கொள்ள நீண்ட நெடிய பெருவாழ்வை வாழ்ந்திட உள்ளன்புகொண்டு வேண்டுகிறேன்.

பேரன்பின் நெகிழ்வில்,

உங்கள் சீமான்

முந்தைய செய்திமாணவச்செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்