நெல்லை மாவட்டம், கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

212

நெல்லை மாவட்டம், கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கூடுதாழை மற்றும் கூட்டப்புளி கிராமங்களைச் சேர்ந்த மீனவமக்களின் 25 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திருக்குரியது.

திசையன்விளையை அடுத்துள்ள கூடுதாழை கடற்கரை கிராமத்தில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் நாட்டுப் படகின் மூலம் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் முறையான தூண்டில் வளைவு இல்லாத காரணத்தால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்திக் கடந்த 10 நாட்களாக மீனவச் சொந்தங்கள் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட அனைத்து மீனவ கிராம மக்களும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், போராடும் மீனவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க முன்வராதது, ஆளும் திமுக அரசின் அலட்சியப்போக்கை வெளிக்காட்டுவதாகவே உள்ளது.

ஆகவே, கூடுதாழை மற்றும் கூட்டப்புளி ஆகிய இரு கிராம மக்களின் கால் நூற்றாண்டுகாலக் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திகிருஷ்ணகிரியில் ஜெகன் எனும் இளைஞரை ஆணவப்படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும். – சீமான் வலியுறுத்தல்