அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து

234

அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து

உலகின் மிகத் தொன்மையான இனமான தமிழ்த்தேசிய இனத்தின் புத்தாண்டு தை முதல் நாளான இன்றைய நாளில் இருந்து தொடங்குகிறது. இந்த உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய் மொழியான தமிழ் மொழி எப்போது தோன்றியது என இதுவரை கண்டறியாத பழம்பெருமை கொண்டது. உலகின் முதல் மாந்தன் தமிழன் என்பதை உலகின் ஆகச்சிறந்த தொல்லாய்வு அறிஞர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

உலக நாகரீகம் நதிக்கரைகளில் தோன்றியது என வரலாற்றை எழுதியவர்கள் வியப்புடன் தெரிவிக்கும் காலத்திலேயே நாகரீகம் அடைந்த இனமாக தமிழர் என்கின்ற தேசிய இனம் விளங்கியது என்கிற உண்மை அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்ட பெருஉண்மையாக இருக்கிறது. குமரிக்கண்டம் என்கிற நிலப்பரப்பில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழ் வளர்க்க சங்கங்கள் வைத்து வரலாறு படைத்தார்கள் என்கிறபோது, அந்த முதுபெரும் காலத்திலேயே ஒரு மொழி தோன்றி வளர்ச்சி நிலை அடைந்து இலக்கண இலக்கியச் செழுமை உயர்ந்து செழித்து விளங்கியது என்கிற உண்மையை உலகோர் புரிந்துகொள்ள முடிகிறது.
நீண்டகாலமாகப் பெருமைகள் பல வாய்ந்த நம் தேசிய இனத்தின் பண்பாட்டு விழுமிய திருவிழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ‌ திகழ்கிறது. ஒரு தேசிய இனம் காலத்தின் போக்கில் வளர்ச்சி நிலை அடையும்போது அதன் பண்பாட்டு‌ தொடர்ச்சி அறுபடுகிற‌ காட்சிகளை வரலாற்றில் காண முடிகிறது. ஆனால், தமிழர் இன வரலாற்றில் இந்த இனம் தோன்றிய காலத்திலிருந்து அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி பெருவிழாவாகப் பொங்கல் திருநாள்தான் விளங்குகிறது என்பதை நம் மொழியின் பழம்பெரும் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழரின் வாழ்வியல் என்பது இயற்கை வழி நின்று மரபுசார் வாழ்க்கை என்ற ஒன்றை உருவாக்கி அறிவியல் குணங்களோடு உயிர்மநேயப் பண்புகளோடு வாழ்ந்து காட்டி உலகிற்கே உதாரணமாக விளங்கியது என்பதுதான் விண்ணளவு உயர்ந்த நமது பெருமையாகும். மழை பெருகி, மண் செழித்துப் புது மணப்பெண்ணாய் புவி பூத்து நிற்கின்ற காலம் தை மாதம். பெய்யெனப் பெய்த மழை நின்று, குளிரும், வெயிலும் இணைந்து விளைச்சலுக்குரிய மண்ணாய், நமது தாய் மண் தழைத்து, ததும்பி தயாராக நிற்கையில் தொடங்குகிறது தமிழ்ப்புத்தாண்டு.

மண் செழிக்க ஏர் செலுத்தி, உலகின் பசி தீர்க்க நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி தன் உதிரத்தால் உலகின் பசியாற்றிய முது இனம் நம் தமிழினம். உலகின் மூத்த குடி தமிழரின் ஆதி தொழிலாக உலகிற்கே உணவளிக்கும் உழவுத்தொழில் இவ்வாறாகத்தான் உருவானது. தன் உழவுக்கு உதவும் ஐந்தறிவு விலங்கான மாட்டினைக்கூட வீட்டிலுள்ள ஓர் உறவாக நினைத்து அதைப் போற்றி வணங்கி ஏறு தழுவி மாட்டுக்கொரு பொங்கலெனக் கொண்டாடித் தீர்த்தவன் தமிழன்.
வீரத்திலும், அறத்திலும், கொடையிலும், மாறாப் பற்றுறுதி கொண்டு தாய் மொழியாம் தமிழைத் தனது உயிராய் நினைத்து உலகு சிறக்க வாழ்ந்த இனம் தான் தமிழ் இனம். ஆனால், வரலாற்றின் போக்கில் இடையில் வந்தோர் சாதி, மதத் தடைகளைத் தமிழர் மண்ணில் நிறுவ உயிரெனப் போற்ற வேண்டிய இனமான ஓர்மை உணர்வை இன்று இழந்து விட்டு நிற்கிறது. ‘இட்டார் பெரியார்! இடாதோர் இழிகுலத்தோர்’ என அறம் பாடி நின்ற இனம் பிறப்பின் வழி உயர்வு தாழ்வு கற்பித்துத் தனக்குள்ளே பூசலிட்டு வேரை மறந்து விவேகத்தைத் தொலைத்து திக்கற்று நிற்கின்றது.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்கிறது தமிழர் மறை திருக்குறள். அத்தகைய வேளாண்மை எனும் தமிழர்களது வாழ்வியல் இன்றைக்கு முற்றாக நலிந்துகொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியப் பெருநிலம் முழுமைக்குமே உழவர்களின் நிலை மிகக் கீழாகத்தான் இருக்கிறது. மண் வளம், மலைவளம் என அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டிக்கொழுத்து, தன்னலம் மட்டுமே போற்றுகிற அந்நிய முதலாளிகளுக்கும், கூட்டிணைவு நிறுவனங்களுக்கும் தரகு வேலை பார்த்து வருகிற ஒன்றிய அரசின் கொடுங்கோல் செயல்பாடுகளாலும், தவறான பொருளாதாரக்கொள்கைகளாலும் நாடே இன்று இருண்டுக்கிடக்கிறது. இந்தத் துயர் நிலையைப் போக்கிட வர இருக்கின்ற நம்பிக்கை வெளிச்சமாய்ப் புதுப்பானையில் பொங்குகிற பொங்கல் எனத் தை திருமகள் இன்று முதல் அடி எடுத்து வைக்கிறாள். ஒரு இனப்படுகொலையைத் தன் தலைமுறையில் சந்தித்த இந்த உலகில் எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தேசிய இனமாகத் தமிழினம் விளங்குகிற சூழலில் இழந்தவற்றை மீட்கவும், காக்கவுமென எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கைகளோடு புத்தாண்டு பிறக்கிறது.

‘தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு’ என்கிற புத்துணர்ச்சியோடு உலகத்தமிழர் எல்லாம் உள்ளத்தில் உவகைக் கொள்ளும் இந்நன்னாளில் தமிழர் தன் வாழ்வில் இழந்துவிட்டு இருக்கிற சகல விதமான உரிமைகளையும் மீட்டெடுக்க
தாழ்ந்து வீழ்ந்துக் கிடக்கும் இந்த மண்ணில் மகத்தான புரட்சித்தீயினைப் பற்ற வைத்திட, நாம் தமிழர் திரளத் தொடங்கியிருக்கும் காலத்தில் தான் தைத்திருமகள் வளம் திரண்ட நம்பிக்கைகளோடு களம் பற்றிய கனவுகளோடு நம் முன்னே வருகிறாள்! என் உள்ளமெல்லாம் பூரித்துப் பொங்குகிற பேரன்போடும், நம் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மூலம் எப்போதும் நாம் பெறுகிற நம்பிக்கைகளோடும் உலகம் முழுவதும் பரவி வாழும் உறவுகள் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

அநீதிக்கு எதிராக, அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதிமத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை, இயற்கை வள நலச்சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை போன்ற கேடுகளுக்கு எதிராக உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல்!

நாளைய பொழுது தமிழுக்கானதாய் விடியட்டும்! புலரும் புத்தாண்டு உழவர் பெருங்குடிகளுக்கானதாய் மலரட்டும்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்!