சென்னை மாநகராட்சியின் அரைகுறை மழைநீர் வடிகால் பணிகளே ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு முழுமுதற் காரணம் ! – சீமான் கண்டனம்

126

சென்னை மாநகராட்சியின் அரைகுறை மழைநீர் வடிகால் பணிகளே ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு முழுமுதற் காரணம் ! – சீமான் கண்டனம்

மழைநீர் வடிகால் பணிகளை முறையாகத் திட்டமிடாது, மழைக்காலம் நெருங்கி வந்தபிறகு அவசரகதியில் அரையும் குறையுமாக மேற்கொண்ட சென்னை மாநகராட்சியின் மெத்தனப்போக்கே புதிய தலைமுறை ஊடகவியலாளர் அன்புத்தம்பி முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பிற்கு முழுமுதற் காரணமாகும். கோடைக்காலத் தொடக்கத்திலேயே மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு முன்கூட்டியே முடிப்பதற்கு அறிவுறுத்தாமல், மழைநீர் வடிகால்களை, மரணக் குழிகளாக மாற்றி நிறுத்தியிருக்கும் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மை வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது சென்னை மாநகர் வெள்ளத்தில் மிதக்கும் தனித்தீவுபோலக் காட்சியளிப்பதற்கு 55 ஆண்டுகள் தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மையும், முறைகேடுகளுமே முக்கியக் காரணமாகும்.
மாநகரைத் திட்டமிட்டு உருவாக்காததோடு, மாநகரத்திலிருந்த நீர்நிலைகளைத் தங்களின் பேராசைக்குக் காவுகொடுத்த ஆட்சியாளர்கள் இப்போது காலநிலை மாற்றத்தை கண்காணிக்கக் குழு அமைத்து என்ன பயன்? நாசகரத் திட்டங்களை நடைமுறைப்படுத்திச் சுற்றுச்சூழலை நாசமாக்கி, காலநிலை சீர்கெடவும், பருவம் தவறி மழை பெய்யவும் காரணமே இந்த திராவிட அரசுகள்தானே?

சென்னை மாநகரிலிருந்த இயற்கை நீர் சேமிப்புக் கிடங்குகளான ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்துவிட்டு, பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி எப்படிக் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயற்படுத்துகிறார்களோ அதுபோல, இயற்கையில் அமைந்த நீர் வழித்தடங்களான கால்வாய்கள், வாய்க்கால்கள், ஆறுகள் ஆகியவற்றை அழித்துவிட்டுத் தற்போது செயற்கையாக மழைநீர் வடிகால்கள் அமைத்து ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடிகளைச் செலவழித்துச் சீரமைப்பது என்பதும் அறிவுக்கு ஒவ்வாததாகும். அவ்வாறு அமைக்கும் பணிகளையும் முறையாகத் திட்டமிட்டு முன்கூட்டியே முடிக்காமல், மழைநீர் வடிகால்களை மரணக் குழிகளாக மாற்றி நிறுத்தியிருக்கிறது திமுக அரசு.

சென்னை மாநகர் முழுவதும் 95 விழுக்காடு மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டதாகச் சென்னை மேயர் கூறியது அப்பட்டமான பொய் என்பது தம்பி முத்துகிருஷ்ணனின் மரணத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தம்பி முத்துகிருஷ்ணன் போல இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குவதற்கு திமுக அரசும், சென்னை மாநகராட்சியும் காத்திருக்கிறது?

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கிய பிறகு வெள்ளத்தை வெளியேற்றுவதிலும், நிவாரணம் வழங்குவதிலும் காட்டும் வேகம், வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதில் ஆளும் அரசுகள் காட்டுவதில்லையே ஏன்? கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளின்போது அவர்கள் செய்த தவறுகளிலிருந்து சிறிதும் பாடம் கற்றுக் கொள்ளாமல், திமுக அரசும் அதே தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் மழைநீர் வடிகால்களை முறைப்படுத்தி மழைக்காலத்திற்கு முன்பே அவற்றைச் சீரமைத்து முடிக்காமல் தற்போது மழைக்காலம் தொடங்கிய பிறகு, அவரகதியில் வெற்று விளம்பர அரசியலுக்காக வடிகால்களைத் தூர்வாறுவதாக சென்னை மாநகர் முழுவதையும் புதைகுழிகளாக மாற்றியுள்ளது திமுக அரசு. இது மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை விட, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பேராபத்தான நிலையாகும்.
சென்னை மாநகர மக்கள் இப்படுகுழிகளில் சிக்கிக்கொள்ளாமல் கவனமுடன் பயணிக்க வேண்டும். மழை நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, தம்பி முத்துக்கிருஷ்ணன் போல இனி ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோகாமலிருக்க
தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது சென்னை மாநகராட்சி மூலம் உடனடியாக மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடைகள், உள்ளிட்ட பணிகள் நிறைவுபெறாமலும், முறையாக மூடப்படாமலும் உள்ள உயிரை காவுவாங்கும் மரணக்குழிகளையும், மின்சாரம் தாக்குவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளையும் கண்டறிந்து, அவற்றின் முன் தடுப்புகள் அமைத்தும், எச்சரிக்கை பலகைகள் நிறுவியும் மக்களைக் காத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ள தம்பி முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதியையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தம்பி முத்துகிருஷ்ணனின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கு எடுக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்