ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

134

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உயிர் காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனைக்குரியதாகும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக்கூட நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும் தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மக்கள் உயிர்காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றியவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கொரோனோ நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பே முதன்மையான காரணமாகும். தமிழ்நாடு அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009 இன் படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தவேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை, கடந்த பதினொரு ஆண்டுகாலமாக உயர்த்தவில்லை என்பது சிறிதும் மனச்சான்றற்ற செயலாகும்.

பெருந்தொற்று நடவடிக்கைக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவிடும் தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவர்களுக்கு நியாயமாகத் தரவேண்டிய ஊதிய உயர்வை வழங்க மறுப்பது ஏன்? இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்று அரசு கூறும் நிலையில், சுகாதாரத்துறையில் பின்தங்கியுள்ள மற்ற மாநில அரசுகள் வழங்கும் ஊதியத்திற்கும் கீழாக, இந்திய ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் ஊதியத்தைவிடக் குறைவான ஊதியத்தை தமிழ்நாடு அரசு வழங்குவது ஏன்?

தனியார் மருத்துவமனைகள் மருத்துவத்தை இலாபமீட்டும் தொழிலாக மாற்றியிருக்கும் தற்காலத்தில், தமிழகக் கிராமங்களில் ஓரளவாவது மருத்துவச் சேவை கிடைக்க அரசு மருத்துவர்களின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையே முதன்மையான காரணமாகும். தமிழகத்தில் உள்ள 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர். அத்தகைய போற்றுதற்குரிய அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியமளித்து அங்கீகரிக்க வேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.

அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய பிறகும், அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையிலும் உரிய ஊதியம் வழங்காமல் கடந்த அதிமுக அரசு இறுமாப்புடன் தட்டிக் கழித்தது. ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்து, அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு ஆகியும், இதுவரை மருத்துவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் கண்டும் காணாமல் காலம் கடத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே, தமிழ்நாடு அரசு மக்களின் உயிர்காக்கும் பெரும்பணியாற்றும் அரசு மருத்துவர்களை, இனியும் உரிமைக்காக வீதியில் நின்று போராடும் நிலைக்குத் தள்ளாமல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். தங்களது நியாயமான அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக வருகின்ற 28 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் முன்னெடுக்கவிருக்கினற உண்ணாநிலை அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்று, கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவரங்கம் தொகுதி திரு ஆணைக்கா கோவிலில் அன்னை தமிழில் வழிபாடு
அடுத்த செய்திதிருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவர் ராஜ் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்வுச் செய்தி