தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் தொற்றுக் காய்ச்சலைத் தடுக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதோடு, நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

89

தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் தொற்றுக் காய்ச்சலைத் தடுக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதோடு, நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாகக் குழந்தைகளிடத்தில் கடுமையான காய்ச்சல் பரவி வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. வேகமாகப் பரவி வருவது எவ்வகைக் காய்ச்சல் என்பதை அறிய முடியாமலும், அதிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வழிமுறைகள் தெரியாமலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.

காய்ச்சல் பாதித்தவர்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரபடுத்தாமல், காய்ச்சல் வேகமாகப் பரவவில்லை என்றுகூறி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அணுகுமுறை மிகத்தவறானது. குழந்தைகள் உயிர் பறிபோனாலும் பரவாயில்லை, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைப்பது கொடுங்கோன்மை மனப்பான்மையாகும்.

எனவே, தமிழகத்தில் பரவி வரும் விசக்காய்ச்சலை கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக விடுமுறை அளிப்பதோடு, சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, பெற்றோர்களின் அச்சத்தைத் தீர்க்கும் விதமான பாதுகாப்பு விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும் உடனடியாக வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழக கிராமங்கள் தோறும் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கபசுர குநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி