இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

145

இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணியாற்றி வரும் வணிகத் தொடர்பாளர்களைத் தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்ற முடிவெடுத்துள்ள வங்கி நிர்வாகத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த பல ஆண்டுகளாக வங்கி ஊழியர்களாகப் பணியாற்றியவர்களைத் திடீரென்று தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரிய நிர்பந்திப்பது அவர்களது வாழ்வாதாரத்தையே அழிக்கின்ற கொடுஞ்செயலாகும்.

இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியில் வணிகத் தொடர்பாளர்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. மக்களுக்கும், வங்கிக்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டு படிப்பறிவற்ற ஏழை மக்களிடத்தில் பொருளாதாரச் சேமிப்பு மற்றும் வங்கி சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர். அதுமட்டுமின்றி முதியோர் உதவித்தொகை, நூறுநாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட அரசினது திட்டங்களின் பயன்களைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டுசேர்ப்பதிலும் வணிகத் தொடர்பாளர்கள் உறுதுணையாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வந்த 3400க்கும் மேற்பட்ட வணிகத் தொடர்பாளர்களை, தற்போது குறிப்பிட்ட தனியார் நிறுவனப் பணியாளர்களாக மாற்ற வங்கி நிர்வாகம் முடிவெடுத்திருப்பது இத்தனை ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். ஊழியர்களின் ஊதியத்தில் 20 விழுக்காட்டினை தரகுத் தொகையாகப் பிடித்தம் செய்து உழைப்பை உறிஞ்சும் தனியார் நிறுவனத்திடம் பணிபுரிய வலியுறுத்துவதும், வேலை செய்ய மறுக்கும் ஊழியர்களை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்வதும் எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். வங்கி நிர்வாகத்தின் இச்செயல் பல ஆண்டுகளாகத் தொண்டாற்றி வரும் ஊழியர்களின் உழைப்பை அவமதிப்பதோடு, அவர்களைத் துச்சமெனத் தூக்கி எறியும் கொடுஞ்செயலாகும். அதுமட்டுமின்றி மெல்ல மெல்ல பொதுத்துறை வங்கிகளை முழுவதுமாகத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தொடர் நடவடிக்கையின் தொடக்கமாகவே இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு இந்தியன் ஓவர்சீஸ் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றி வரும் வணிகத் தொடர்பாளர்களைத் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக மாற்றும் வங்கி நிர்வாகத்தின் முடிவைக் கைவிடச் செய்வதோடு, தொடர்ந்து வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்