இடிந்துவிழும் நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல், திமுக அரசு மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் கண்டனம்

266

இடிந்துவிழும் நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல், திமுக அரசு மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம், பருத்திக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3ஆம் வகுப்பு மாணவர் அன்பு மகன் விஷ்ணு தலையில் 20 தையல்கள் போடும் அளவிற்குப் பலத்த காயமடைந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், மாணவச் செல்வங்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த வாரம் 3ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, ஒன்றாம் வகுப்பு மாணவி அன்பு மகள் சுபிஸ்னாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து 8ஆம் வகுப்பு படித்துவந்த 3 மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனே, வழக்கம்போல அனைத்து பள்ளிக்கூடங்களின் தரத்தையும் ஆராய ஒரு குழுவினை அமைத்தது திமுக அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அக்குழு ஆராய்ந்து அளித்த அறிக்கை எங்கே? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இடிந்து விழும் நிலையிலிருந்த எத்தனை தரமற்ற பள்ளி கட்டிடங்கள் இழுத்து மூடப்பட்டது? எத்தனை பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டன? மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பள்ளிகள் எத்தனை? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.

கடந்தகாலத் துயர நிகழ்வுகளைப் படிப்பினையாகக் கொண்டேனும் திமுக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது பருத்திக்குடி தொடக்கப்பள்ளி போன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் சீர் செய்யப்பட்டு அவற்றின் தரமானது மேம்பட்டிருக்கும். ஆனால், அதனைச் செய்யத் தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்கே, தற்போது அன்பு மகன் விஷ்ணுவின் உயிருக்கே ஆபத்தான அளவிற்குக் காயம் ஏற்பட முக்கியக் காரணமாகும். மேற்கூரை விழுந்ததில் ஏதேனும் ஒரு மாணவரின் உயிர் பறிபோயிருந்தால் திமுக அரசால் அதனைத் திருப்பித் தர முடியுமா? மதுக்கடைகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் பல நூறு கோடிகளைச் செலவு செய்யும் திமுக அரசு, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதற்கு மட்டும் தனியார் முதலாளிகளிடம் கையேந்தி நிற்பது அவமானகரமானதாகும்.

ஆகவே, ஒவ்வொரு முறையும் விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டபிறகு, பெயரளவில் ஆய்வுக்குழு அமைக்கும் கண்துடைப்பு நாடகத்தை திமுக அரசு இனியாவது கைவிட்டு, கட்டிடப்பொறியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளின் உறுதித்தன்மை குறித்து முறையாக ஆய்வுசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நிபுணர் குழுவின் தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ள பள்ளி, கல்லூரிகளை மட்டுமே திறப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும், மாணவ கண்மணிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாதெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமறைமுக மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் ‘ஒரே மின் இணைப்பு’ திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபோராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்