ஆளுங்கட்சி என்ற மமதையோடும், அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும், ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை..! – சீமான் கண்டனம்

178

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட புத்தேரி – துவரங்காடு சாலை முற்றிலும் தரமற்றதாகப் போடப்படுவதைக் கண்டித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை முறையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களை சாலை ஒப்பந்ததாரரும், திமுக கிழக்கு மாவட்ட பொருளாளருமான கேட்சன் மற்றும் தோவாளை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிராங்கிளின் ஆகியோர் அடியாட்கள் துணையோடு தாக்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

புதிதாக அமைக்கப்படும் சாலைகளுக்கென்று அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசும், தலைமைச்செயலாளர் ஐயா இறையன்பு அவர்களும் வலியுறுத்தியுள்ள நிலையில், அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மேற்படி சாலை அமைக்கப்பட்டுள்ளது. மிக மோசமாகச் சாலை அமைப்பதால் ஏற்படும் விபத்துகளையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் நலன்களையும் கருத்தில்கொண்டு போராடிய எமது தம்பிகள் தாக்கப்பட்டுள்ளது திமுக ஆட்சியின் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் மற்றுமொரு சான்றாகும்.

சனநாயக தன்மை, குறைந்தபட்ச நேர்மை ஆகியவற்றை திமுகவிடம் எதிர்ப்பார்க்க முடியாது என்றாலும், ஆளுங்கட்சி என்ற மமதையோடும், அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும், ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி