29-08-2022 – ஆகத்து 30 – சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் | சீமான் உரை
“ஆகஸ்ட் 30 ஆம் தேதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுடைய நாள். ஐ.நா மனித உரிமை ஆணையம் இந்த நாளை காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நாளாக அறிவித்திருக்கிறது. இறுதி கட்ட ஈழப்போரின்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நாங்கள் ஒப்படைத்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 59 க்கும் மேல். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எமது மக்கள் சரணடைந்தார்கள். அவர்களினுடைய நிலை என்ன? அவர்கள் இன்று என்ன ஆனார்கள்? என்கிற கேள்விக்கு எவரிடத்திலும் பதிலில்லை. இலங்கையின் முன்னாள் அதிபர் சிறிசேனா, பிறகு அதிபராக தேர்வு செய்யப்பட்டு, இன்று வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சே, அவர்களெல்லாம் இறந்துவிட்டார்கள் என்ற வார்த்தையில் முடித்துவிட்டார்கள்.
உலகெங்கும் இருக்கிற மானுட பற்றாளர்கள், மதிப்புமிக்க தலைவர்கள் யாருமே இதுகுறித்து பேசவில்லை. குறிப்பாக இந்திய பெருநாடு, தமிழர்களின் தாயகத்தை உள்ளடக்கிய இந்திய ஒன்றிய அரசு கூட இதுகுறித்து பேசவில்லை. இது வரலாற்றில் ஒரு மிகப்பெரிய துயரம் என்பதை தாண்டி, கொடுமை. காணாமல் போன எங்கள் பிள்ளைகளை, எங்கள் உறவுகளை கண்டுபிடித்து தாருங்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கூறுங்கள் என்று எமது மக்கள், அவர்கள் உருவப்படம் பதித்த பதாகைகளை ஏந்திக்கொண்டு, தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். அது இன்றோடு 2000 நாட்களை தொடுகிறது. இது ஒரு நீண்ட கண்ணீரும், வேதனையும், துயரமும் தோய்ந்த ஒரு போராட்டம்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு, அருகிலே இருக்கின்ற பெரும் நாடுகள், உலக வல்லாதிக்க நாடுகள், போராடி விடுதலை பெற்ற புரட்சியால் பூத்த பூமிகள், எதுவுமே எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, செவிசாய்க்கவில்லை. அருகில் இருக்கிற இந்திய ஒன்றியத்திற்குள் தனக்கென்று ஒரு அதிகாரம் அரசு வைத்திருக்கிற தமிழ்நாடு கூட, பெருமளவிற்கு இதை பார்க்கவில்லை, கேட்கவில்லை, ஏர்க்கவில்லை என்பது தான் நிகழ்கால உண்மை. காணாமல் போனவர்களை கண்டு மீட்கிற இந்த போராட்டடத்தில், எளிய பிள்ளைகள் நாங்கள் தொடர்ச்சியாக எமது மக்களோடு இணைந்து பயனித்துக்கொண்டு இருக்கிறோம். உலகெங்கும் பரவி வாழுகிற என் உயிர் சொந்தங்கள், எனது அன்பு உறவுகள், போராடுகிற என் மக்களின் மனநிலையோடு, உணர்வோடு இணைந்து, ஒவ்வொரு நாளும் அதே உணர்வோடு நாங்கள் பயணிக்கிறோம். குறிப்பாக இந்த ஆகஸ்ட் 30 ஆம் நாள், ஒரு பேரெழுச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறோம். எழுத்து, பேச்சு, பாட்டு, கட்டுரை, களத்தில் இறங்கி கூடிப் போராடுவது என்று எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த போராட்டத்தை தொட்ரந்து நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். உலக மானுட சமூகம், எங்கள் குரல்களை செவி வழியே கேட்காமல், இதயக் கதவுகளை திறந்து வைத்து கேட்க வேண்டும். அப்போது தான் எங்களின் வலியும், வேதனையும், துயரமும் தொடர்ச்சியாக நாங்கள் தூக்கிச்சுமக்கிற துன்பமும் அவர்களுக்கு தெரிய வரும்.
எமது மக்கள், கதறி அழுது சிந்துகிற கண்ணீரை எங்கள் கைகளில் எந்த முடியுமே தவிர, எங்கள் விரல்களால் அவர்கள் விழிநீரை துடைக்க முடிகிறதே தவிர, அவர்கள் இதயத்திற்குள் சுமக்கிற துயரத்தை, வேதனையை துடைக்க முடியவில்லை. இந்த சூழலில், எனது அன்பு மக்கள், அருமை உறவுகள், என்னிலும் இளைய என் தம்பி தங்கைகள், இந்த உணர்வு நிலை நீர்த்துப் போகாமல், மங்கிப் போகாமல், மறைந்து போகாமல் பாதுகாத்து, பெருந்துயரை சுமக்கிற நம் இனத்திற்கு ஒரு விடிவு, ஒரு முடிவு வருவதற்கு நாமெல்லாம் பெரும்பாடாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆகஸ்ட் 30, காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நாளிலே கண்ணீரோடும், கவலையோடும் தங்கள் உறவுகளை தேடித்தாருங்கள் என்று போராடுகிற எமது மக்களின் உணர்வோடு நாங்களும் இணைந்து, அவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறோம் என்பதை நான் இதன்மூலம் தெரிவிக்கிறேன். நம்பிக்கையோடும், உறுதியோடும் நாம் தொடர்ந்து போராடுவோம். நன்றி வணக்கம்!