திருமஞ்சனக் கட்டணம் பெற பண்டாரத்தினரே உரித்தானவர்கள்! – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

208

தலைநிலக் குறிஞ்சித்திணை தந்த தலைவன் தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் போற்றப்படும் பழனியிலுள்ள கோயிலின் வழிபாட்டுக் கட்டணத்தைப் பெறுவதற்குப் பண்டாரங்களே உரித்தானவர்கள் எனக்கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறேன். பழனி திருக்கோயிலுக்குக் காலங்காலமாகத் திருத்தம் செய்து வருபவர்கள் பண்டாரங்கள் என்பதற்குரிய ஆவணங்களும், கல்வெட்டுப்பதிவுகளும் சாட்சியங்களாக இருக்கும் நிலையில், அதனை நிலைநாட்டும் விதமாக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தொகையைப் பெற்றுக்கொள்ள பண்டாரச்சமூகத்தினருக்கு முழு உரிமையுண்டு என வெளிவந்திருக்கும் இத்தீர்ப்பு மிக மிக நியாயமானதாகும்.

நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா நிகழ்வு 07-02-2015 அன்று பழனியில் நடைபெற்றபோது, புலிப்பாணி சித்தர்கள் மற்றும் பண்டார சமூகத்தினருக்கான உரிமையை நிலைநாட்டக்கோரியே முதல் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது. பண்டாரம், மருத்துவர், பறையர், குயவர், வண்ணார் ஆகிய சமூகங்களுக்கு தமிழகத்தின் பல கோயில்களில் இருந்த உரிமைகள் தற்போது மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவை யாவும் மீட்கப்படும் எனும் நம்பிக்கையை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி, உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் 12 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு
அடுத்த செய்திசுற்றறிக்கை: விருகம்பாக்கம் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு