கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

131

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், அஷ்வின், நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 01.08.22 அன்று பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான செய்தியறிந்து மன வேதனையடைந்தேன். படகு விபத்தில் சிக்கிய நால்வரில் நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய இரு மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், பிரசாத், அஷ்வின் ஆகிய இருவர் விபத்து நடந்து 2 நாட்களாகியும் மீட்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது.

ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கே மீனவர்களை மீட்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முக்கிய காரணமென அப்பகுதி மீனவச்சொந்தங்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். எனவே, காணாமல்போன மீனவர்களை மீட்பதற்குக் கடலோர காவற்படை மற்றும் விமானப்படையின் மூலம் தேடும்பணியை தீவிரப்படுத்த வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு அரசு இரு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்