அனிதாவில் தொடங்கி சுபஸ்ரீ வரை ஒவ்வொரு வருடமும் நம்முடைய பிள்ளைகள் நீட் தேர்வால் கொல்லப்படுவதைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

58

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பரின் மகள் சுபஸ்ரீ(19) கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வுக்காக, தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த இவர் கடந்த ஆண்டு 451 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்திருந்ததால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, செப்டம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட தேர்வு அச்சத்தால், மாணவி சுபஸ்ரீ கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், துயரத்தையும் அளிக்கிறது.

இது தற்கொலை என்பதைவிட மத்திய மாநில அரசுகள் செய்கின்ற பச்சைப்படுகொலை என்றே கூற வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய தமிழக அரசின் மனு என்னவானதென்று இதுவரை தெரியவில்லை. அனிதாவில் தொடங்கி சுபஸ்ரீ வரை ஒவ்வொரு வருடமும் நம்முடைய பிள்ளைகள் நீட் தேர்வால் கொல்லப்படுவதை தடுக்க இனியாவது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவி சுபஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். அவர்களது ஈடு செய்ய முடியாத இழப்பினால் உண்டான துயரில் பங்கெடுப்போம்.