மாயோன் பெருவிழா – தலைமை அலுவலகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

387

19-08-2022 | மாயோன் பெருவிழா | சீமான் செய்தியாளர் சந்திப்பு

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி, இன்று 19-08-2022 காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் பெருவிழா கொண்டாடப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று. முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம்.

பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.”

“எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்கவேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், தமிழ் பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம். உலகமெங்கும் இருக்கிற தமிழ் பெருங்குடி மக்களோடு எனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்களுடைய இறையைப் போற்றுகிற இவ்வேளையில், தர்மம் தழைத்தோங்க வேண்டும், அதர்மம் அழிய வேண்டும் என்று அநீதிக்கெதிராக அறத்தின் வழிநின்ற எங்கள் மாயோனின் வழியில் நிற்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்கிறோம். அவர் நின்ற அறத்தின் வழிநின்று அரசாட்சி செய்வோம் என்று இந்நாளில் உறுதியேற்பதே, நாங்கள் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். ‘மாயோன் பெரும்புகழ் போற்றி! போற்றி!’ என்று முழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திதூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமுதுகுளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சசிக்குமார் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல் செய்தி