அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

264

அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

விலைவாசி உயர்வால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில், மின்கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கும் திமுக அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சொத்துவரி உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லலுறும் நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் உயர்த்தி இருக்கும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவுக்கு ஏற்ப மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால் மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வசூலித்துவிட்டு, மின்கட்டண உயர்வினை ஒவ்வொரு மாதத்திற்கும் அறிவித்துள்ளது மிகப்பெரிய மோசடியாகும். அதன்படி தற்போது அரசு வெளிப்படையாக அறிவித்துள்ள கட்டண உயர்வை விட பலமடங்கு கட்டணத்தைத் தமிழ்நாட்டு மக்கள் செலுத்த வேண்டிவரும். அதுமட்டுமல்லாமல் மாதம் 500 மின்அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கான கட்டண உயர்வுவானது, 600, 700 மின்அலகுகள் பயன்படுத்துவோருக்கான கட்டண உயர்வினைவிட இருமடங்கு அதிகமாக ஏன் உயர்த்தப்பட்டுள்ளது? என்ற காரணத்தைத் தமிழ்நாடு அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் வணிக மின்நுகர்வோருக்குக் கூடுதலாக மாதம் 50 ரூபாயும், வாடகை வீடுகளில் உள்ள கூடுதல் மின் இணைப்பிற்குக் கூடுதலாக மாதம் 225 ரூபாயும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றிச் சிறுகுறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் இக்கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஆளும் அரசுகள் மக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, மாறிமாறி மக்களைக் கசக்கிப் பிழிந்து வழிப்பறிபோல வரியைப் பறிக்க நினைப்பது சிறிதும் அறமற்ற கொடுங்கோன்மையாகும்.

ஏற்கனவே மக்கள் செலுத்தவே முடியாத அளவிற்குச் சொத்துவரியைப் பன்மடங்கு உயர்த்திவிட்டு, ஒன்றிய அரசின் அறிவுறுத்தலே காரணம் என்று கைகாட்டியதுபோல், தற்போது மின்கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்திவிட்டு மீண்டும் ஒன்றிய அரசின் உத்தரவின்பேரிலேயே உயர்த்தியுள்ளோம் என்று கூறுவது உண்மையில் தமிழகத்தை ஆளுவது திமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகத்தை மக்களுக்கு எழுப்புகிறது. மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஒன்றிய அரசு மின்சார மானியத்தை நிறுத்திவிடும் என்கிறார். மானியம் நிறுத்தப்பட்டால் அதனை நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள 39 உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டுப் போராடிப் பெறவேண்டுமே தவிர, மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றி மானியம் பெற நினைப்பது திமுக அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் 300 மின்அலகுகள் வரை முற்றிலும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் நிலையில், அம்மாநிலத்திற்கெல்லாம் ஒன்றிய அரசு அழுத்தம் தரவில்லையா? மோடி அரசின் கையசைவுக்கு ஏற்ப திமுக அரசு செயல்படுமாயின், மாநில சுயாட்சி என்று மேடைதோறும் திமுகவினர் பேசுவது வெறும் வெற்றுப் பேச்சுதானா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசினை கைகாட்டுவதை நிறுத்தி, அதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலிபோது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி தனியார்ப் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம்! – சீமான் குற்றச்சாட்டு
அடுத்த செய்திஎண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு