எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு

199

19-07-2022 – எண்ணூர் கிராம மக்களுடன் சீமான் | தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்து கட்டிவரும் தொடரமைப்புக் கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து, சூலை 19,2022 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில், அங்குள்ள மீனவச் சொந்தங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் மாபெரும் கள ஆய்வு நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சீமான் அவர்கள் கூறியதாவது, “பலநூறு ஆண்டுகளாக இயற்கையின் பெருங்கொடையாக இருந்து வருகிற இந்த கொற்றலை ஆற்றைச் சுற்றி, பல நச்சு தொழிற்சாலைகள், மின்னுற்பத்தி நிறுவனங்களை நிறுவி, அவை வெளியிடும் உலர் சாம்பல், வெண்ணீர், கழிவுநீர் என எல்லாவற்றையும் ஆற்றில் கலக்கவிடுகிறது. பிறகு மீன் உற்பத்தி எப்படி நடக்கும்? அலையாத்தி காடுகள் ஏக்கர் கணக்கில் அழிக்கப்படுகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு உட்பட்ட 17 ஏக்கர் அலையாத்தி காடுகளையும் சேர்த்து ஆக்கிரமித்து, இந்த தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் TANTRANSCO, வடசென்னையில் இருக்கிற மின்னுற்பத்தி நிலையங்களின் மின்சாரத்தை சேமித்து விநியோகம் செய்ய உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைக்க இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. கடலில் வாழுகிற இறால், மீன்கள், நண்டுகள் இந்த அலையாத்தி காடுகளை நோக்கித்தான் வரும். அங்கு சாம்பல், எண்ணெய், வெண்ணீர், கழிவுநீர் கலக்கப்பட்டால், மீன் உற்பத்தி எப்படி நடக்கும்? இங்கு நண்டு, இறால் உற்பத்தியே இல்லாமல் போய்விட்டது. இருக்கிற மீன்களெல்லாம் செத்து மிதக்கிறது. அங்கு இருக்கிற நீரின் நிறம் மிகவும் கருப்பாக உள்ளது. இந்த ஆற்றையே வாழ்வாதாரமாக கொண்டு பலநூறு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எங்கு போவார்கள்? ஆற்றின் நடுவே சுவர் கட்டினால், ஆற்றில் ஓடிவருகிற நீர் எப்படி கடலுக்குச் சென்று சேரும்? இங்குள்ள மீனவர்கள் படகில் சென்று எப்படி மீன்பிடித்துவிட்டு திரும்பமுடியும்? இங்குள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் சாம்பல், காற்றில், நீரில், நிலத்தில், உணவில், காயவைத்திருக்கும் துணிகளில் கூட படிந்துள்ளது. மகிழுந்தில் சென்று திரும்பினால் உங்கள் வாகனத்தின் நிறம் சாம்பல் நிறமாக மாறிவிடும். பிறகு சுவாசக்கோளாறு, புற்றுநோய் வராதா? மக்கள் வாழுகிற வாழ்விடமாக இது எப்படி இருக்கும்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

“மின்சார உற்பத்தி வேண்டுமென்றால்,  மாற்று மின்பெருக்கத்திற்கு அரசு வரவேண்டும். காற்றாலை, சூரியஒளியில் தேவையான அளவு மின்சாரம் தயாரிக்க முடியும். காற்றாலை மின்சாரம் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது. சூரியஒளி மின்சார உற்பத்தி அதானிக்கு கொடுத்தாகிவிட்டது. சிறு சிறு முதலாளிகளுக்கு 200 ஏக்கர் 300 ஏக்கர் என்று விளைநிலங்கள் பறித்து கொடுக்கபட்டுவிட்டது. ஏதாவது ஒன்று அரசிடம் உள்ளதா? ஆனால் இதுபோன்று ஆபத்து விளைவிக்க கூடிய அணுஉலை, அனல்மின் நிலையம், நச்சு ஆலைகளை அரசாங்கமே ஏற்று நடத்துகிறது. தனியார் நடத்தினால் கூட அதை எதிர்த்து போராடலாம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்படித்தான் மக்கள் போராடினோம். மக்களால் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, மக்களிடமே அதிகாரத்தை செலுத்தினால், அதிகாரமற்ற மக்கள் என்ன செய்வது? இந்த ஆற்றை சுத்தம் செய்வதற்கு குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும். இப்போதுள்ள கழிவுகளை அகற்றிவிட்டு, மேற்கொண்டு கழிவுகள் கலக்காமல் தடுத்து நிறுத்தி, பிறகு இயற்கையாக நீர் ஓடிவந்து அது தன்னைத்தானே உயிர்பித்துக்கொள்ளும். அதற்கு முதலில் வாய்ப்பளிக்க வேண்டும் அல்லவா? இங்கு பயணிக்கும்போது சுற்றியுள்ள ஆலைகளில் இருந்து வரும் நச்சு காற்று மேகமா அல்லது புகையா என்று தெரியாத அளவிற்கு படர்ந்துள்ளது. காற்று, நீர், நிலம் இந்த மூன்றும் நஞ்சாகிவிட்டது. மக்களுக்கு தூய்மையாக என்ன இருக்கிறது? இந்த நீரில் உள்ள நண்டுகள் மலடாகிவிட்டது, இறால் நிறம் மாறிவிட்டது, மீன்கள் செத்து மிதக்கிறது. இதை மனிதன் சாப்பிட்டால் நாம் என்ன ஆவது? நாங்கள் சாப்பிடுவது உணவா இல்லை நஞ்சா? மக்களை வாழவைக்கத்தான் அதிகாரங்கள் நிறுவப்படுகிறது, அழிப்பதற்கு அல்ல. இங்கு சுற்றியுள்ள ஆலைகளில் நம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறிவிட்டு, இப்போது பார்த்தால் 80 விழுக்காடு வட இந்தியர்கள் தான் பணி செய்கிறார்கள். எங்கள் படித்த மீனவ பிள்ளைகள் எத்தனை பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது? மீனவ படகுகள் வெறுமனே நின்றுகொண்டு இருக்கிறது. அதில் அவர்களால் இனி மீன்பிடிக்க செல்ல முடியாது. இந்த நிலை மாறவேண்டும். இதை அரசு கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும். சாலையில் வாகனங்கள் வேகமாக பயணிக்கும்போது அடிக்கிற காற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பது, கடல் அலைகளில் மின்சாரம் தயாரிப்பது போன்றவற்றை எங்கள் ஆட்சி வரைவில் கொடுத்திருக்கிறோம். நட்சத்திர விடுதிகளை கட்ட இடம்கொடுத்ததைப் போல, மின் உற்பத்திக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கி அதில் இந்த ஆலைகளை நிறுவலாம். எந்த காலத்திலும் தடையில்லா காற்று வரும், அதிக அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். கேரளாவில் அதிகளவு வீடுகளிலும் சூரியஒளி மின்தகடு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல இங்கு எல்லா தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களின் மாடிகளிலும் சூரியஒளி மின்தகடு அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம். நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்துகிற இதுபோன்ற நச்சு திட்டங்களை அரசு கைவிட வேண்டும். நாங்கள் இதற்காக போராடுவதென்று முடிவெடித்துவிட்டோம். வரும் 31ஆம் தேதி இங்கேயே போராட்டம் செய்யப்போகிறோம். அடக்குமுறைகளை பாய்ச்சி எங்களை சிறைபடுத்தினாலும் போராடுவோம். போராடுவது எங்களுக்கு பொழுதுப்போக்கு அல்ல, நாளைய தலைமுறையினருக்கு நல்ல பொழுதை உருவாக்குவதற்கு! இது எங்கள் வாழ்விடம். இதை காப்பாற்ற நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். அதனால் உறுதியாக போராடுவோம். எனவே, இந்த கொற்றலை ஆற்றை ஆக்கிரமித்து மின் கோபுரங்களை அமைப்பதை கைவிடவேண்டும் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார சீரமைப்பினை வலியுறுத்தி தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

 

 

 

 

முந்தைய செய்திஅனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்