குமரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!

188

தொல்காப்பியர் காலந்தொட்டு கி.பி.1766 வரை குமரி மாவட்டம் தமிழ் அரசர்களின் கீழ் இருந்து வந்தது. கி.பி.1766-இல் ஆற்காடு நவாப் பாண்டியப் பேரரசனிடமிருந்து இந்நிலப்பரப்பைக் கைப்பற்றி திருவிதாங்கூர் அரசனுக்கு வழங்கினான். திருவிதாங்கூரில் மன்னரும், மக்களில் சில இனத்தவரும் மருமக்கள் வழி சட்டத்தைப் பின்பற்றிய காரணத்தினால் தமிழ் மன்னர்கள் மலையாள மன்னர்களாக மாறினர். தமிழ் மொழி இருந்த இடத்தில் வட்டார மொழியாகத் தோன்றிய மலையாள மொழி ஆட்சி பீடம் ஏறியது.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு சமூகத்தினர் தங்களை பூமியில் வாழும் கடவுளாக பாவித்துக்கொண்டு அரசனும் தங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று நடைமுறைபடுத்தியதில் நடந்த சாதி கொடுமைகள் 10-ம் நூற்றாண்டில் உச்சகட்டத்தை அடைந்தது. குறிப்பிட்ட சமூகங்களின் ஆண்கள் தலைப்பாகையும், பெண்கள் மேலாடையும் அணியக் கூடாது என்றுகூட இருந்தது. தலைவரி, தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி ஆண்களின் மீசைக்கு வரி, கைத்தடிக்கு வரி, குடை வரி என வகை வகையாய் வரிகள் வசூலிக்கப்பட்டன. பல்வேறு வரிகளுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு அனுமதியில்லை. மலையாளம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. சாதியரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். இந்த நிலையை மாற்றுவதற்காக, பல பெரியோர்கள் பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர்.

கி.பி.1766-1956-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் இந்நிலப்பரப்பை மலையாள மொழியை அரச மொழியாகக் கொண்ட கேரள அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இங்குள்ள தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க மலையாள ஆட்சியாளர்கள் இந்நிலப்பரப்பை மலையாள மயமாக்கினர்; தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். இதனை எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து போராடிய போராட்டமே, குமரித்தமிழர் விடுதலைப் போராட்டமாகும்.

இப்போராட்டம் 1823-இல் தோள்சீலைப் போராட்டத்தில் தொடங்கி 1836-இல் ஐயா வைகுண்டர் வழியாக தொடர்ந்து 1956-இல் ஐயா மார்சல் நேசமணி வழியாக நிறைவு பெற்றது. 190 ஆண்டு கால அடிமை வாழ்க்கை 9 வருடங்களில் (1945-1956) 15 இலட்சம் குமரித் தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் மூலம் நிறைவு பெற்றது. ஐயா மார்சல் நேசமணி அவர்களின் தலைமையில் குமரித்தமிழர்கள் இதனைச் செய்து முடித்தனர். இந்தியா விடுதலை அடைந்த பிறகு கேரளாவுடன் இணைந்திருந்த கன்னியாகுமரியும், மற்ற பகுதிகளும் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு அரும்பாடுபட்டதனால் தான் குமரித்தந்தை என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் ஐயா மார்ஷல் நேசமணி.

1936-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்க முயற்சிகள் தொடங்கப்பட்டது. காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை 1945-ல் கேரளாவுடன் இணைக்கப்பட்டபோது மீண்டும் போராட்டம் தொடங்கியது. 1945 டிசம்பர் 9 ஆம் நாள், சமூக நீதிப் போராட்டத்திற்காக ஐயா நேசமணி அவர்களால் “திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்” தொடங்கப்பட்டது. இதை 1947 செப்டம்பர் 8 இல் சிவதாணுப்பிள்ளை எம்.எல்.ஏ. அறிஞர் சிதம்பரம்பிள்ளை, அப்துல் ரசாக் எம்.எல்.ஏ. ஆகியோருடன் இணைந்து ஆலன் மண்டபத்தில் வைத்துத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை அரசியல் இயக்கமாக நேசமணி மாற்றினார். இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் சிலம்புச்செல்வர் ஐயா ம.பொ.சி அவர்கள்.

1948-ல் குமரி உரிமை மீட்பு போராட்டப் பொதுக்கூட்டம் நடந்தபோது கூட்டத்தை கலைக்க கேரள காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையன் ஆகியோர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதியில் எல்லாம் போராட்டம் அதிகரித்தது. இந்த போராட்டங்களில் பொதுவுடைமை தலைவர் பா.ஜீவானந்தமும் இணைந்து செயல்பட்டு வந்தார்.

1954 சூலை மாதம் மூணாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. ஐயா நேசமணியின் போராட்ட வேகத்தைக் கண்ட திரு விதாங்கூர் அரசு 04.07.1954 அன்று மார்சல் நேசமணி, ஜனாப் அப்துல் ரசாக் முன்னாள் அமைச்சர் சிதம்பரநாதன் ஆகியோரைத் தேவிகுளத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தமிழார் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது. ஆகத்து 9-ஆம் நாள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 1954 ஆகத்து 11ஆம் நாளை விடுதலை தினமாக அறிவித்தது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்.

அன்றைய தினம் மார்த்தாண்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆற்றூர் பொன்னையன், நட்டாலம் இராமையன், தக்கலை எம்.பாலையன், மார்த்தாண்டம் பப்பு பணிக்கர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதே போல் புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காரணமே தெரியாமல், சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனைக் கண்டித்து சிதம்பரநாதன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார். ஐயா மார்ஷல் நேசமணியின் தொடர்ச்சியான, திட்டமிட்ட செயல்பாடுகளால் விடுதலைத் தீ வேகமாகப் பரவியது. தொடர்ந்து வேகமெடுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானமும் கிடுகிடுத்தது. ஐயா மார்சல் நேசமணி திருவிதாங்கூரில் நீதி கிடைக்காத காரணத்தால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வழக்குகளைப் பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றி எல்லாருக்கும் பிணை வாங்கினார். அதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பட்டம் தாணுப்பிள்ளை அமைச்சரவையைக் கவிழ்த்தார்.
இதற்கு பிரஜாசோஸியலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான இராமசாமிப் பிள்ளை உற்ற துணைபுரிந்தார்.

இதற்கிடையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், 1955-ம் ஆண்டு நேரு தலைமையிலான அரசு மொழிவாரி மாநிலங்கள் அமைக்க குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எல்லைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956-ம் நவம்பர் 1-ம் நாள் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. அப்போது, ஐயா மார்சல் நேசமணியின் தொடர் போராட்டம் காரணமாக தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 9 தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரிப் போராட்டம் நடந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை தாலுகாவின் ஒரு பகுதி என நான்கரை தாலுகாக்கள் மட்டும்தான் கிடைத்தன. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை போன்ற பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார் ஐயா மார்ஷல் நேசமணி. ஆனால் அன்றைய அரசியல் தலைவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்று அது நடந்திருந்தால் இன்று முல்லைப்பெரியாறு, நெய்யாறு போன்ற தண்ணீர் பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம்.

தமிழகத்துடன் இணைந்த பகுதிகளுக்கு குமரி மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டுமென்று ஐயா மார்ஷல் நேசமணி அவர்கள்வைத்த கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி என்று பெயர் சூட்டினார் பெருந்தலைவர் காமராசர்.

குமரிமண் தமிழகத்தோடு இணைவதற்காக நடைபெற்ற போராட்டங்களில் உயிர்நீத்த 11 ஈகிகளின் நினைவைப் போற்றும் நாள் இன்று (ஆகத்து-11).

உயிரை இழப்பதென்பது தனிப்பட்ட இழப்பு; உரிமையை இழப்பதென்பது இனத்திற்கான இழப்பு என்ற நெஞ்சுறுதியோடு தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் கொண்ட உரிமையை போராடி மீட்க, குமரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் ஈந்த ஈகியருக்கு நாம் நமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

நாம் தமிழர்!