மொனோகோ படகுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்! – கோவை குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து

37

கோவை, குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல், கட்டிடக்கலை உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் பொறியியல் பயின்று வரும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் 14 பேர் இணைந்து முழுக்க முழுக்கச் சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் படகை தயாரித்து சாதனைப்படைத்துள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

மொனோகோ நாட்டில் மாணவர்கள் தயாரிக்கும் படகுகளைக் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் நடத்தப்படும் மொனோகோ ஆற்றல்மிகு படகுச் சவால் (Monaco Energy Boat Challenge) போட்டியில் இதுவரை இந்தியா சார்பில் எந்த படகும் பங்கேற்றதில்லை. இந்நிலையில், முதல் முறையாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் தயாரித்த சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் படகும் மொனோகோ படகுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

இயற்கையோடு இயைந்த மாற்று மின்சார உற்பத்தி மற்றும் மாற்று எரிபொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்ற தத்துவத்தை இந்த இளம் வயதிலேயே புரிந்துகொண்டு, தங்களது பொறியியல் அறிவின் துணையால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, உலகத்தார் அங்கீகரிக்கும் வகையில் அவற்றில் வெற்றியும் பெற்றுள்ள எனதன்புத் தம்பி-தங்கையருக்கு உளமார்ந்த பாராட்டுகள்!

நடைபெறவிருக்கும் மொனோகோ ஆற்றல்மிகு படகுச் சவால் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க தம்பி-தங்கையருக்கு புரட்சி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்படிப்பட்ட இளம் தலைமுறையினரை ஆளும் அரசு அடையாளங்கண்டு ஊக்கப்படுத்துவதுடன், அவர்கள் மேலும் பல புதிய தொழில் நுட்பங்களையும் கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ள எல்லாவிதமானத் தற்கால வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து உறுதுணையாக நிற்கவேண்டுயது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும் எனவும் அறிவுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநன்னிலம் தொகுதி – பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரி போராட்டம்
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்