வடமாநிலத்தவர்களின் விபரங்களை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பதிவுசெய்யும் முறையை தமிழகம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

150

வடமாநிலத்தவர்களின் விபரங்களை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பதிவுசெய்யும் முறையை தமிழகம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்
– சீமான் வலியுறுத்தல்

இராமேசுவரம் நகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் குறித்தான முழு விபரங்களையும் அரசின் ஆவணச்சான்றுகளோடு பதிவுசெய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகம் அறிவித்திருப்பதைப் பெரிதும் வரவேற்கிறேன். அண்மைக்காலத்தில் மிதமிஞ்சிய அளவில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர்களின் வருகையும், அவர்கள் மூலம் பறிக்கப்படும் தமிழர்களது பொருளியல் வாய்ப்புகளும், திட்டமிடப்பட்டக் குற்றச்செயல்களும் பெரும் எச்சரிக்கையை நமக்குத் தருகின்றன. வடமாநிலத்தவர்களின் வரம்பற்ற வருகையானது தமிழர் தாயகத்தின் மீது தொடுக்கப்படும் படையெடுப்பு எனக்கூறி முன்அறிவிப்பு செய்து, வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல வெளிமாநிலத்தவர்களுக்கென உள்நுழைவுச்சீட்டு முறையை தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டுமென நீண்டநெடுநாட்களாக வலியுறுத்தி வருகிறோம்.

இராமேசுவரத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை கொலை நடந்து, அதற்குப் பின்னரே, உள்ளூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொண்டு வடமாநிலத்தவர்கள் குறித்தான விபரங்களைக் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டுமென அறிவித்திருக்கிறது. தாமதமானதுதானென்றாலும், இது மிகச்சரியான முன்னெடுப்பாகும். இதனை தமிழ்நாடு முழுமைக்கும் நடைமுறைப்படுத்த அரசுக்கு என்ன தயக்கம்? மற்ற மாவட்டங்களில், வடமாநிலத்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டப் பின்னர்தான், அதனை செய்வதற்கு முன்வருவார்களா? எனும் கேள்விகள் எழுகின்றன.

ஆகவே, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, வடமாநிலத்தவர்களின் விபரங்களை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பதிவுசெய்யும் முறையை தமிழகம் முழுமைக்கும் செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கோருகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராடியதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீதிபதி முன் நேர் நின்ற சீமான் – செய்தியாளர் சந்திப்பு