புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராடியதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீதிபதி முன் நேர் நின்ற சீமான் – செய்தியாளர் சந்திப்பு

239

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கு முன் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று (31.05.2022) காலை 10 மணியளவில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீதிபதி முன் நேர் நின்றார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

`புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராடியதற்காக கொரோனா காலத்தில் என் வீட்டிற்கு முன் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கிற்காக இன்று நீதிபதியின் முன் நேர் நிற்க வேண்டிய கட்டாயத்தினால் நேர் நின்றேன். இரண்டு வாரம் கழித்து மீண்டும் வரவேண்டும் என்று நீதிபதி அவர்கள் கூறியுள்ளார்கள். இதில் என் மேல் வழக்குப் போடுவது இருக்கட்டும், புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்கிறதா இருக்கிறதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். என் மீது வழக்கு போட்டது ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிமுக அரசு. இப்போது திமுக அரசு அமைந்த பிறகு மதிப்புமிக்க காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு அவர்கள் கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். ஆனால் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. அதே நேரத்தில் கொரோனா காலத்தில் தம்பி உதயநிதி மீதும் நிறைய வழக்குகள் போடப்பட்டது. அவருக்காகத்தான் இந்த வழக்குத் தள்ளுபடி உத்தரவு வந்ததோ என்று நினைக்க வேண்டி உள்ளது. உள்ளபடியே கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யும் என்றால் எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்குகள் எங்களுக்கு புதிதல்ல நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் என் மேல் இருக்கிறது. தற்போது இந்த வழக்கையும் எதிர் கொள்வோம். எங்களுடைய கேள்வி இந்த அரசு எதிர்கட்சியாக இருக்கும் வரை புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தது. இப்போது அதில் சில நல்ல பகுதிகள் இருப்பதை ஏற்போம் என்கிறது. அந்த சில நல்லது எது என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அரசிற்கு பொதுகேள்வியாக நான் வைக்கிறேன். பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏற்படும் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நம்முடைய பிள்ளைகள் மனமுதிர்ச்சி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். அப்படி இருக்கையில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை எப்படி ஏற்க முடியும்? குடிக்கும் குடிநீர், சுவாசிக்கும் காற்று ஆகியவை முற்று முழுதாக மாசுபட்டு விட்டது, உணவு நஞ்சாகி விட்டது, வாழும் பூமி பாலைவனமாக மாறி வருகிறது. அதை பற்றி எதுவும் கவலை இல்லை. இதில் மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது போன்ற ஒரு அடிமைத்தனம் உலகத்தில் எங்காவது உண்டா? எனவே புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராடினோம், தொடர்ந்து போராடுவோம். புதிய கல்விக் கொள்கை என்ன சிறப்பு இருக்கிறது என்பதை அண்ணாமலை விளக்கி கூறவேண்டும். அவர் வாதம் வைக்கட்டும். அதற்கு நாங்கள் எதிர்வாதம் வைக்கிறோம். புதிய கல்விக் கொள்கை முழுக்க முழுக்க இந்தி, சமஸ்கிருத திணிப்பைத்தான் வலியுறுத்துகிறது.

இராமேஸ்வரம் நகராட்சியில் மட்டும் வடமாநிலத்தவர் குறித்த தகவல்கள் பெறப்படுவதோடு நிறுத்தாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள வடமாநிலத்தவர்கள் குறித்த தகவல்கள் எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உள்நுழைவுச் சீட்டு வழங்கி அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதை நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதுபோல், வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும்போது அவர்கள் எங்கே வேலைக்கு செல்கிறார்கள், எங்கே தங்குவார்கள், எத்தனைநாள் தங்குவார்கள், என்பது பற்றிய தகவல் வரும்போதே பெறப்படவேண்டும். அதன் பிறகே அனுமதிக்க வேண்டும். இப்போது இராமேஸ்வரத்தில் மீனவ் தங்கையை வடமாநிலத்தவர் வன்புணர்வு செய்து கொன்று விட்டபிறகு, ஓரிடத்தில் கேட்கிறீர்கள். நான் தமிழ்நாடு முழுவதும் வேண்டும் என்கிறேன். அவர்களுக்கு சுழற்சிமுறையில் வந்து வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை அனைத்தும் கொடுத்து, நிரந்தரமாக இங்கே தங்கிவிடுவார்கள். இதனால் எங்களுடைய அரசியல் அதிகாரம் அவர்களிடம் பறிபோகிறது. பிறகு தமிழர்கள் நாங்கள் அடிமையாகி சொந்த மண்ணிலேயே அடிமையாகிவிடுவோம். இலங்கையில் அதுதான் நடந்தது. நாளை இங்கேயும் அதுதான் நடக்கும். அதனால்தான் நாங்கள் உள்நுழைவுச் சீட்டு வழங்க மாநில அரசே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகிறோம். ராமேஸ்வரத்தில் செய்ததுபோல் ஏன் மாநிலம் முழுக்க செய்யமுடியவில்லை?

தமிழ்த்தேசியம் என்றால் பார்ப்பனர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்று அண்ணன் திருமாவளவன் அவர்கள் கூறுவது தவறானது. கடந்தகாலத்தில் எங்களுக்கு தமிழ் தேசியத்தை கற்பித்தது விதைத்தது அவர்கள்தான். அப்போது தெரியவில்லையா பார்ப்பனர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்று. எங்களை போன்ற பிள்ளைகளுக்கு இந்த சிந்தனையை விதைத்தது யார்? ஐயாவும், அவரும்தானே. அப்போது அவர் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் என்று கொள்ளலாமா? நான் இந்து, எங்கள் அம்மா இந்து என்கிறார். ஆர்எஸ்எஸ், பாஜக கோட்பாட்டையே இவர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள்தான் இந்துத்துவ கோட்பாட்டை கருத்தியலை வழிமொழிந்து பேசி வளர்க்கிறார்கள்.

இந்த நிலத்தில் தமிழியத்திற்கும் ஆரியத்திற்கும்தான் நேரடிப்போர் நடந்திருக்கிறது. எங்கள் இலக்கியங்கள் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றுதான் பாடுகிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்தான். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும்தான் சண்டை. தமிழர் கழகம், தமிழ்த்தேசியம் என்று பேசினால் பிராமணர்கள் வந்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம் ஒரு பார்ப்பனர் கூட வரவில்லை. ஆனால் பார்ப்பனரே வரமாட்டார் என்று சொன்ன திராவிட கட்சியின் தலைவராக 35 ஆண்டுகளாக ஆரிய பெண்மணியான ஜெயலலிதா இருந்தவிட்டு சென்றுவிட்டார் அதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? நாங்களா மயிலாப்பூரில் சிவ இரவு எடுத்து, பசுமடம் கட்டி, பல்லாக்குக்கு அனுமதி எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்? பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவுக்கு, மக்கள் வீடுகளை இடித்துவிட்டு பசுவிற்கு மடம் கட்டுவதென்பது எவ்வளவு பெரிய முற்போக்கு புரட்சி. தொடங்கிய காலத்திலிருந்து இந்த மண்ணில் பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து இடைவிடாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தமிழ்த்தேசிய இயக்கங்கள்தான்.

நகராட்சிகளில் உள்ள தெருக்களில் சாதி பெயரை நீக்கியதோடு நிற்காமல் தென்மாவட்டங்களில் உள்ள பெரியநாயக்கன்பாளையம், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட எல்லா ஊர் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களையும் நீக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா?

திமுக அமைச்சர்கள் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதும், உதயநிதி அமைச்சர் பதவி வேண்டாம் என்பதும், நீங்கள் கிள்ளுவது போல் கிள்ளுங்கள் நான் அழுவது போல் அழுகிறேன் என்பதுபோலத்தான். கட்சியில் எதிர்ப்பு இல்லை, ஆதரவு உள்ளது என்பதை காட்டுவதற்காகத்தான் இவ்வாறு பேசவைப்பார்கள்.

முந்தைய செய்திவடமாநிலத்தவர்களின் விபரங்களை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பதிவுசெய்யும் முறையை தமிழகம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் வெள்ளையதேவன் புகழ் வணக்க நிகழ்வு