சமூக நீதியென வாய்கிழியப்பேசிவிட்டு, தங்களது வகுப்புரிமைகளுக்காகப் போராடும் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் தம்பி இரணியனைக் கொடூரமாகத் தாக்கி, கைதுசெய்வதா? – சீமான் கண்டனம்

429

சமூக நீதியென வாய்கிழியப்பேசிவிட்டு, தங்களது வகுப்புரிமைகளுக்காகப் போராடும் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் தம்பி இரணியனைக் கொடூரமாகத் தாக்கி, கைதுசெய்வதா? – சீமான் கண்டனம்

தொல்குடி மக்களின் உரிமை மீட்சிக்காக அறவழியில் போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள் மீது காவல்துறையினர் கொடூரமானத்தாக்குதலை நிகழ்த்தியதில் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தங்களது சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் பறிபோகும் சமூகநீதி சூறையாடலுக்கெதிராக சனநாயக வழியில் போராடிய தம்பி இரணியன் மீது கோரத்தாக்குதலைத் தொடுத்த இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சமூக நீதியென வாய்கிழியப் பேசிவிட்டு, தங்களது சமூகத்திற்கான நியாயமான தீர்வைக்கேட்டு நிற்கும் தொல்குடி மக்கள் மீது காவல்துறையைவிட்டுத் தாக்குவது என்பது வெட்கக்கேடானது. ஒடுக்கப்பட்டுள்ள விளிம்புநிலை மக்களை அதிகாரம் கொண்டு அடக்குவதும், தாக்குவதுமான இச்செயல்கள்தான் சமூக நீதியா? அறவழியில் நீதிகேட்கும் தொல்குடியினர் மீது அதிகாரத்தின் கோரமுகத்தைக் காட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியலிலுள்ள குறவர்குடி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனவும், வடமாநிலங்களைச் சேர்ந்த ‘நக்கலே’ சமூக மக்களை, ‘நரிக்குறவர்’ எனப் பெயர்மாற்றி அழைப்பதால், தமிழ்நாட்டில் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வகுப்புரிமைகளும் பறிபோவதைத் தடுக்க வேண்டுமெனவுமென தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கவேண்டி, அமைதிவழியில் போராடிய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் தம்பி இரணியனையும், அக்கட்சியினரையும் திமுக அரசு காவல்துறையினர் மூலம் தாக்கி, கைதுசெய்திருப்பது சனநாயக விரோதமாகும்.
கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு எனத் தொடர்ந்து வட மாநிலத்தவர்களால் தமிழர்களின் உரிமைகள் நாள்தோறும் அபகரிக்கப்படும் வேளையில், அதிலும், குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாகப் பின்தங்கியுள்ள குறவர்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பன்னெடுங்காலமாகப் பறிக்கப்பட்டு வருவது சமூக அநீதியாகும். அதற்கெதிராக அணிதிரண்டு, தங்களது உரிமைகளை மீட்பதற்காகப் போராடும் தொல்குடி மக்களை, ஆளும் திமுக அரசு அடக்கி ஒடுக்கித் துன்புறுத்துவதும், கைதுசெய்து வழக்குகளைப் பாய்ச்சுவதுமானப் போக்குகள் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, தமிழக அரசால் கைது செய்யப்பட்டுள்ள வனவேங்கைகள் கட்சியின் தலைவர் தம்பி இரணியன் அவர்களையும், அவரது கட்சியினரையும் வழக்கு ஏதுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், குறவர்குடி மக்களின் நியாயமானக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அதற்கான தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇந்தித்திணிப்புக்கெதிரானக் கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திசுற்றறிக்கை: தருமபுரி நாடளுமன்றத் தொகுதிக் கலந்தாய்வு