தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளை தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

85

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளை தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயற்றேன். ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

 

பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்து கொள்கிறார்கள். விதிமீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும்.

 

கடந்த 2005ஆம் ஆண்டு சிவகாசி மீனாம்பட்டியில் நடந்த விபத்தில் 20 பேர்; 2009ல் சிவகாசி நமசுகரித்தான்பட்டியில் நடந்த விபத்தில் 18 பேர்; 2010ல் சிவகாசி விபத்தில் 7 பேர்; 2011ல் சனவரி விருதுநகர் விபத்தில் 7 பேர்; அதே ஆண்டு ஏப்ரலில் நடந்த விபத்தில் 2 பேர்; சூன் மாதம் தூத்துக்குடி விபத்தில் 4 பேர்; 2012ஆம் ஆண்டு செப்டம்பரில் முதலிப்பட்டி விபத்தில் 40 பேர்; அதே ஆண்டு டிசம்பரில் சேலம் மேச்சூர் விபத்தில் 10 பேர்; 2013ஆம் ஆண்டு சிவகாசி நாரயயணபுரம் விபத்தில் 6 பேர், 2016ஆம் ஆண்டு மார்ச்சில் சிவகாசி காரிசேரியில் விபத்தில் 3 பேர்; சூன் மாதம் சிவகாசி பூலாவூரணி விபத்தில் 2 பேர்; சூலை மாதம் சிவகாசி வெம்பக்கோட்டை விபத்தில் 2 பேர்; அக்டோபரில் விழுப்புரம் துருவை அருகே ஏற்பட்ட விபத்தில் 5 பேர், அதே மாதம் சிவகாசி விபத்தில் 8 பேர், கோவை பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர், 2017 மார்ச் சிவகாசி விபத்தில் 5 பேர், 2018 சிவகாசி காக்கிவாடன்பட்டி விபத்தில் 3 பேர், 2019 பிப்ரவரி திருநெல்வேலி விபத்தில் 6 பேர், 2020 பிப்ரவரி சாத்தூர் விபத்தில் ஒருவர், செப்டம்பரில் காட்டுமன்னார்கோவில் விபத்தில் 9 பேர், 2021 பிப்ரவரி சாத்தூர் விபத்தில் 28 பேர், அதே ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் சிவகாசியில் நடந்த விபத்தில் தலா ஒருவர், 2022 நவம்பர் மதுரை பட்டாசு ஆலை விபத்தில் 5 பெண்கள், 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் சிவகாசி விபத்தில் ஒருவர், மே மாதம் விருதுநகர் விபத்தில் இருவர், ஜூன் மாதம் சேலம் விபத்தில் மூவர், இந்த மாதம் 7 ஆம் தேதி சிவகாசி மீனம்பட்டி விபத்தில் 2 பேர், 25 ஆம் தேதி தாயில்பட்டியில் 3 பேர், தற்போது கிருஷ்ணகிரியில் 9 பேர் எனக் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடி விபத்துகளில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்த பெருந்துயரம் இன்றுவரை நீண்டுகொண்டே வருகிறது.

 

பட்டாசு ஆலை விபத்துகளில் தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கும் குடும்பங்கள் எத்தனை? அதனால் கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் எத்தனை பேர்? பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் இக்கொடுமைகளை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கப்போகிறது?

 

உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும்தான் பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.

 

மனித உயிர்களை பலி வாங்கும் இத்தகைய கொடும் வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசானது பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுத்து அவர்களின் மறுவாழ்விற்கு உதவிடுவதே நிரந்தர தீர்வாக அமையும் என்று அறிவுறுத்துகிறேன்.

 

மேலும், தற்போது கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உடனடியாக நீதி விசாரணை செய்வதோடு, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திமின்கம்பம் சாய்ந்த விபத்தில் காலினை இழந்த ஜூடோ வீரர் தம்பி விக்னேசுவரனுக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும்! – செந்தமிழன் சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்