தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

157

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

 

தமிழ்நாட்டில் அழிந்துவரும் வேளாண்மையைப் பாதுகாக்க தமிழக விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஏற்க மறுத்துவருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

 

தமிழ்நாட்டினை மாறி மாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் கடந்த 60 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் வேளாண்மை முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, முல்லைப் பெரியாறு, சிறுவாணி என்று தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை ஒட்டுமொத்தமாக இரு திராவிடக் கட்சிகளும் காவு கொடுத்து முப்போகம் விளைந்த தமிழ்நாட்டில் ஒரு போகம் கூட வேளாண்மை செய்ய முடியாத அளவிற்கு தமிழ் நிலத்தினை பாலைவனமாக மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்வதை வேடிக்கை பார்த்து பாசனப் பரப்பையும் குறைத்ததுடன், வளர்ச்சி என்ற பெயரில் நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் என நாசகார திட்டங்களை அனுமதித்து விளைநிலங்களை பாழ்படுத்தியுள்ளது. மேலும், எட்டுவழிச்சாலை, புதிய விமான நிலையம், தொழிற்பூங்கா அமைப்பது என அடுத்தடுத்து விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து வேளாண்மையையே அடியோடு அழிக்கும் பணிகளையும் திராவிட அரசுகள் மேற்கொண்டு வருகின்றது.

 

வறட்சி, புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், விதைகள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றின் விலையை கட்டுக்குள் வைக்காமல் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தும் வேளாண் பெருங்குடி மக்களை வதைத்து வருகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டி விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை வழங்காமலும் ஏமாற்றி வருகின்றன. மேலும், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட அடிப்படையான வேளாண் பணிகளுக்குக் கூட ஆள் கிடைக்காத அவலச் சூழல் நிலவுவதால் விவசாயப் பெருமக்கள் வேளாண்மையையே முழுவதுமாகக் கைவிட வேண்டிய பேராபத்தான சூழலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்

 

ஆகவே, இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் அழிந்து வரும் வேளாண் தொழிலை பாதுகாக்கும் பொருட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளான,

 

1. விவசாயி பெருமக்களின் அனைத்து விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்குப் புதிய சட்டம் இயற்ற வேண்டும்.

 

2. விளை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

 

3. தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும்.

 

4. நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேளாண் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

5. இந்திய ஒன்றிய அரசின் பயிர் காப்பிட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு உழவரும் பயன்பெறும் வகையில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

6. இந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சாரச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

7. இந்திய ஒன்றிய அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் முற்றிலுமாக தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

 

8. தெலுங்கான, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் உள்ளதுபோல் வருடந்தோறும் ஏக்கருக்கு ரூபாய் பத்தாயிரம் உழவு மானியமாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

 

9. வன விலங்குகளிடமிருந்து வேளாண் பயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

10. ஆனைமலை ஆறு – நல்லாறு ஆறு திட்டத்தையும், அப்பர் – அமராவதி திட்டத்தையும் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

 

ஆகிய நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திதமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளை தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தியாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம் 10ஆம் ஆண்டு விழா – சீமான் வாழ்த்துரை