மின்கம்பம் சாய்ந்த விபத்தில் காலினை இழந்த ஜூடோ வீரர் தம்பி விக்னேசுவரனுக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும்! – செந்தமிழன் சீமான் வலியுறுத்தல்
மதுரை கோச்சடை பகுதியில் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் சிக்கி, இளம் ஜூடோ வீரர் அன்புத்தம்பி விக்னேசுவரன் தனது இடது கணுக்காலை இழந்த செய்தி மிகுந்த மனவலியைத் தருகிறது. மின்வாரிய ஊழியர்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலும், முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்காமலும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதன் விளைவே விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற பெருங்கனவோடு இருந்த இளம் பிள்ளையின் கனவுகள் சிதையக் காரணமாகியுள்ளது.
எனவே, தம்பி விக்னேசுவரனுக்கு நேர்ந்த கொடுமைக்கு மின்வாரியமும், தமிழ்நாடு அரசுமே பொறுப்பேற்று, அவருக்கு அரசு வேலையும், துயர் துடைப்பு நிதியாக 50 லட்ச ரூபாயும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
அன்புத்தம்பி விக்னேசுவரன் எதன் பொருட்டும் மனம் கலங்காமல், உள்ள உறுதியுடனும், துணிவுடனும் வாழ்வினை எதிர்கொள்ள வேண்டுமென்றும், நம்பிக்கையுடன், விடாமுயற்சி செய்தால் தங்களுக்கு விருப்பமான வேறு துறையில் உறுதியாகச் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தம்பி விக்னேசுவரன் விபத்தின் பாதிப்புகளிலிருந்து விரைந்து மீண்டிட விழைகிறேன்!
– சீமான்