உரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

1509

உரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் – சீமான் வலியுறுத்தல் !

நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைகூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. 20 ஆண்டுகளாகப் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் டாஸ்மாக் ஊழியர்களை கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் பழிவாங்கும் செயல் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடுங்கோன்மையாகும்.

தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்ற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகின்ற போதிலும், மதுவிலக்கைப் பூரணமாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் ஏறத்தாழ 27000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்றுவரை தொகுப்பூதியத்தின் கீழ் மிகக் குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி, அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் இதர விற்பனை பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினை கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாகப் பணி நிரந்தரமும் செய்திட வேண்டும்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு, ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்த உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகே, அவர்கள் மீது உரிய துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, முறையாக விசாரிக்காமல் ஏற்கனவே தற்காலிக பணி விடுவிப்புச் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்கிடவும் வேண்டும்.

மேலும், மதுபான சில்லறை விற்பனை கடைகள் அனைத்தையும் கணினி மயமாக்கி “பார்கோடிங்” விற்பனை இரசீது முறையை உடனடியாக நடைமுறைப் படுத்தி முறைகேடுகளைத் தடுப்பதோடு, சென்னை மண்டலத்தைப் போன்று அனைத்து மாவட்டங்களிலும் வங்கி ஊழியர்கள் நேரடியாக விற்பனையகத்துக்கே வந்து பணத்தினைப் பெற்று இரசீது வழங்கிச்செல்லும் முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, சில்லறை விற்பனை கடைகளின் அருகிலேயே மதுக்கூடங்களை நடத்தும் ஆளும் கட்சியினர் உரிமத்திற்கான கட்டுத்தொகையினைக்கூடக் கட்டாமல், விற்பனை நடவடிக்கைகளில் தலையிட்டு ஊழியர்களை மிரட்டி, தாக்கும் போக்கினையும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும், கோடைக்காலங்களில் வெம்மையினால் மதுபான கண்ணாடி போத்தல்கள் வெடித்துச் சிதறி காயமடையும் ஊழியர்களுக்கு உயர்தர மருத்துவம் அளிக்க உத்தரவிடுவதுடன், ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கிட முன்வர வேண்டும்.

ஆகவே, மதுபான சில்லறை விற்பனைகூட ஊழியர்களின் மேற்கண்ட மிக நியாயமான கோரிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதே தமிழ்நாடு அரசு நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திஐயா இளையராஜா மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதிரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டவரைவுக்கு தார்மீக ஆதரவு – சீமான் வரவேற்பு