பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டவரைவுக்கு தார்மீக ஆதரவு – சீமான் வரவேற்பு

229

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டவரைவுக்கு தார்மீக ஆதரவு – சீமான் வரவேற்பு!


தமிழகப்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்திடும் சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் இயற்றியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன். உயர்கல்வியில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான சட்டமுன்வடிவைக் கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில், அதனையேற்று செயலாக்கம் செய்திருக்கும் திமுக அரசின் முடிவு மிகச்சரியான முன்நகர்வாகும்.

மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட தமிழகச் சட்டமன்றத்தினைத் துளியும் மதியாது, அதன் மாண்பினையும், மதிப்பினையும் குலைத்திடும் வகையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்குக்கும், அதிகார அத்துமீறலுக்கும் முடிவுகட்டி, மாநிலத்தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டுமெனும் நிலைப்பாட்டில் நாம் தமிழர் கட்சி உறுதிபூண்டு நிற்கிறது. ஆகவே, தமிழகச்சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டவரைவுக்கு நாம் தமிழர் கட்சி தனது தார்மீகமான ஆதரவினை வழங்குகிறது.

இத்தோடு, மத்தியப்புலனாய்வுத்துறை விசாரணைக்கான மாநில அரசின் பொதுஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தையும் இச்சமயத்தில் வலியுறுத்துகிறேன். முன்னதாக, ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம், மராட்டியம் போன்ற மாநிலங்களின் அரசுகள் மத்தியப் புலனாய்வுத்துறைக்கு வழங்கிய மாநில அரசின் பொது ஒப்புதலை ரத்துசெய்திருக்கும் நிலையில், தமிழக அரசும் அதனைப் பின்பற்றி மாநிலத்தன்னுரிமையை நிறுவ முற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் – சீமான் வலியுறுத்தல்!
அடுத்த செய்திஇராயபுரம் தொகுதி நீர் மோர் , பழங்கள் வழங்கும் நிகழ்வு