கனிமவளக்கொள்ளைக்கெதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குத்தொடுத்து அடக்குமுறையை ஏவுவதா? – சீமான் கண்டனம்

198

கனிமவளக்கொள்ளைக்கெதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குத்தொடுத்து அடக்குமுறையை ஏவுவதா? – சீமான் கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி ‌மலையை உடைத்துத் தகர்த்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்து கேரளாவுக்குக் கடத்தும் கொடுஞ்செயலுக்கெதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குத் தொடுத்து அடக்குமுறையை ஏவும் திமுக அரசின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். முன்னதாக, கனிமவளக்கொள்ளையை தடுக்கப்போராடியபோது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தம்பி சுஜினைக் கொடூரமாகத் தாக்கியக் காவல்துறையினர், தற்போது கனிமவளக்கற்களைக் கொண்டுசென்ற பாரஉந்துகள் குறித்து புகார் தெரிவித்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 10 பேர் மீது வழக்குத்தொடுத்திருப்பது ஏற்கவே முடியாத அட்டூழியமாகும்.

தமிழ்நாட்டின் கனிமவளங்களைக் கடத்தியதற்காக கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 2 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதென அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிப்படையாகக் கூறுகிறார். அந்தளவுக்குத் தலைவிரித்தாடும் கனிமவளக்கொள்ளையைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் அரசின் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? கனிம வளவேட்டையில் ஈடுபடும் கயவர்கள் மீது சட்டத்தைப் பாய்ச்சி நடவடிக்கை எடுக்காது, அக்கொள்ளைக்கெதிராகப் போராடுபவர்கள் மீது வழக்குகளைப் புனைவது எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் விடியல் அரசா? வெட்கக்கேடு! அதிகாரிகளில் சில கறுப்பு ஆடுகள் உள்ளதாகக் குறிப்பிடும் அமைச்சர் மனோ தங்கராஜ், அத்தகையவர்கள் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவெனக் கூறுவாரா? இயற்கையின் கொடையாகத் திகழும் மலைகளைக் காக்கவும், கனிமவளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கவும் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, குவாரிகளை இழுத்து மூட உத்தரவிடுவதற்கு அரசை எது தடுக்கிறது? கனிமவளக்கொள்ளை நடக்கிறதென்பதை வெளிப்படையாக அரசே ஒப்புக்கொண்டபோதிலும், அதனைத் தடுப்பதற்கெனத் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காது அலட்சியம் காட்டுவதன் நோக்கம்தானென்ன? அக்கொள்ளைக்குத் துணைபோகும் அதிகாரிகளை இன்னும் கண்டும் காணாதிருப்பது ஏன்? கல் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள குவாரிகள் அனைத்தும் நீதிமன்றம் அளித்துள்ள விதிகளின் படிதான் செயல்படுகின்றனவா? பாதுகாப்பு வேலி, எச்சரிக்கைப் பலகை, கல் எடுக்க வேண்டிய அளவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட பலகை என அனைத்துமே அரசின் கண்காணிப்பின் கீழ்தான் இருக்கின்றனவா? இருக்கின்றதென்றால், எப்படி 600க்கும் மேற்பட்ட பாரவுந்துகளில் கனிம வளக்கடத்தல் நடக்கிறது? தொடர் வளவேட்டையின் விளைவாக, குவாரிகளின் அருகேயுள்ள வீட்டுச்சுவர்களில் கீறல்கள் விழுந்துள்ளதோடு, சுற்றியுள்ள பசுமைவனங்கள் அனைத்தின் மேல் தூசியும், மாசும் படர்ந்து சூழலியல் மண்டலமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தோடு, ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களாலும், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, கேரளாவுக்குக் கனிமவளங்கள் கடத்தப்படும் கொடுஞ்செயலை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், வளக்கொள்ளையர்களை சட்டத்தின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமெனவும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆவடி தொகுதி-மேற்கு நகரம் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா