அடித்தட்டு மக்களை அதிகாரப்படுத்த நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்! – சீமான் வேண்டுகோள்

329

அடித்தட்டு மக்களை அதிகாரப்படுத்த நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்! – சீமான் வேண்டுகோள்

கொரோனா எனும் கொடிய நோய்த்தொற்று நாடு முழுமைக்கும் வீரியமாய் பரவிக்கொண்டிருக்கிற வேளையில், பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்ற பரப்புரைத்தளங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெருவாரியாக ஊடகத்தின் வாயிலாகவே எமது உறவுகளிடம் வாக்குசேகரிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்!

எனதன்பு உறவுகளிடம், எனதருமைச்சொந்தங்களிடம் நான் உரிமையோடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், நீங்கள் நீண்ட காலமாக ஒரு அரசியல் மாற்றத்தை விரும்புகிறீர்கள்! தன்னலமற்ற, உண்மையும், நேர்மையுமான முறையான நிர்வாகம் வேண்டுமென்று வேண்டுகிறீர்கள்! ஊழல், இலஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது, மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு தூய தேசம் படைத்து, அதில், அனைவருக்கும் கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், அதனைக்கொண்டு வாழும் பெருமைமிக்க வாழ்வினை உருவாக்கிட வேண்டும் என்பதுதான் உங்கள் பிள்ளைகள் எங்களின் உயரிய பெருங்கனவாகும். இலவசத்திற்காக கையேந்தும் வறுமைநிலை இல்லாத உயர்நிலை, நிலவளம், நீர்வளம், மழைவளம், மலைவளம், கடல்வளம், காடுவளம், தொழில்வளர்ச்சி என இவையெல்லாம் காக்கப்பட வேண்டுமென்றால், அதற்கொரு அரசியல் தேவைப்படுகிறது. அதைத்தான் உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் முன்னெடுக்கிறோம். அதற்கு நீங்கள் உங்கள் மதிப்புமிக்க வாக்கை எளிய பிள்ளைகளாகிய எங்களுக்குத் தந்து, வலிமைமிக்க அரசியல் ஆற்றலாக எங்களை மாற்றிட வேண்டுமென்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

நாம் தமிழர் பிள்ளைகள் பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்து வந்தவர்களின் வாரிசுகளோ, பெரும் பொருளாதாரப்பலம் படைத்தவர்களோ அல்லர்; சந்தையில் காய்கனிகள் விற்கின்ற, சுவற்றுக்கு வண்ணம் தீட்டுகிற, தானி ஓட்டுகிற, அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கிற என சமூகத்தின் அடித்தட்டிலுள்ள உழைக்கும் மக்களின் பிள்ளைகளையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். மக்களுடைய துன்பத்துயரங்களையும், அவர்கள் படும் அல்லல்களையும், பாடுகளையும் அறிந்தவர்கள் நாங்கள்.

பசித்தவனுக்குத் தான் பசியின் அருமை தெரியும். எளிய மக்கள் அதிகாரத்துக்கு வரும்போதுதான், உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கான உண்மையான அதிகாரம் பிறக்கும். ஆகவே, ஒரு சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பதற்கு உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்று உரிமையோடும், அன்போடும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வேண்டுகோளை ஏற்று, நான் தங்களிடம் நேரில் வந்து வாக்குக்கேட்டதாக இதனை எண்ணி, எங்களுக்கு உங்களுடைய மதிப்புமிக்க வாக்குகளைத் தாருங்கள் எனக்கோருகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி