எனக்கென்ன நமக்கென்ன என்று ஒதுங்கி நின்றால் இந்நாட்டை ஒருபோதும் சரிசெய்ய முடியாது! அதனால் தயவு செய்து சனநாயகக் கடமையை ஆற்றுங்கள்! – சீமான் வேண்டுகோள்

213

வாக்கு செலுத்தாமல் பொறுப்பற்று விலகி நிற்பதும் ஒரு தேசத்துரோக குற்றம் தான்! – சீமான் சீற்றம்

இன்று 19.02.2022 காலை 9 மணியளவில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதன் சுருக்கம் பின்வருமாறு,

இந்த உலகம் இளைஞர்களுக்கானது; எங்களுக்குமானது தான்! எப்படி பார்த்தாலும் அது இளைஞர்களுக்கானது என்கிறார் புரட்சியாளர் மா சே துங். அதையே தான் என் தம்பி தங்கைகளுக்கும் நான் சொல்கிறேன். எனக்கென்ன நமக்கென்ன என்று ஒதுங்கி நின்றால் இந்நாட்டை ஒருபோதும் சரிசெய்ய முடியாது. பிறகு நாடு’சரியில்லை; அது சரியில்லை; இது சரியில்லை, பாதை சரியில்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை என்று பேசுவதற்கான உரிமையைக் கூட இழந்து விடுகிறோம். எங்கு பார்த்தாலும் ஊழல்-இலஞ்சமாக இருக்கிறது, பணம் பெறாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை என இவற்றையெல்லாம் பேசுவதற்குக் கூட அருகதையற்றவற்களாக நாம் மாறிவிடுகிறோம். அதனால் தயவு செய்து சனநாயகக் கடமையை ஆற்றுங்கள். வாக்கு செலுத்தாமல் பொறுப்பற்று விலகி நிற்பதும் ஒரு தேசத்துரோகக் குற்றம் தான். உங்களுக்கு கல்வி கொடுத்து, வேலைவாய்ப்பு கொடுத்து, வாழ்வதற்கு இடம் கொடுத்து, எல்லாம் கொடுத்திருக்கும் ஒரு நாட்டிற்கு சனநாயகக் கடமையாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

சரியான தலைவரைத் தேர்ந்தெடுங்கள். அப்படி யாருமே சரியான தலைவர் இல்லை என்றால் நீங்களே வாருங்கள், அப்படிதான் நாங்கள் வந்தோம். குறை சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. பிறர் குறை சொல்பவன் அரை மனிதன். தன் குறை காண்பவன் தான் முழு மனிதன் என்கிறார் சாக்ரடிஸ் அதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப்பெருமகனார் ‘ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’ என்கிறார். அதனால் முதலில் உங்களைச் சரி செய்யுங்கள், நீங்கள் வாருங்கள், அரசியலில் எதுவுமே சரியில்லையா நீங்கள் தலைமையேற்று வழிநடத்துங்கள்! அது தானே சரியானது; அதைவிட்டுவிட்டு சோம்பி இருந்துகொண்டு அது சரியில்லை; இது சரியில்லை என்று சொல்பவர்கள் தான் ஆகச்சரியில்லாதவர்கள். சரியில்லாததைச் சரி செய்யத்தான் நீங்களும் நாங்களும் இருக்கிறோம். தமிழ் இளம் தலைமுறையினர் குறிப்பாக கற்றறிந்த பிள்ளைகள், நாட்டையும் மக்களையும் பெரிதும் நேசிக்கும் பிள்ளைகள், ஊழல்-லஞ்சமற்ற ஒரு நிர்வாகம் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தயவுசெய்து வாக்கு செலுத்துங்கள். “உன் ஓட்டு ஒரு யோக்கினுக்கு விழுந்தால் உனக்கு எதிர்காலம். ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுக்கு எதிர்காலம்” என்கிறார் கவியரசர் கண்ணதாசன். உங்கள் எதிர்காலம் மட்டுமல்ல உங்கள் சந்ததிகளின் எதிர்காலமும் இந்த நாட்டின் எதிர்காலமும் நலமுடனும் வளமுடனும் இருக்க விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் மக்கள் பிரதிநிதிகள் தான். ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியைச்செய்வோம்!