சவூதி அரேபியாவில் உயிரிழந்த நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த தம்பி பிரவீன்குமாரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

341

சவூதி அரேபியாவில் உயிரிழந்த நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த தம்பி பிரவீன்குமாரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

குடும்ப வறுமையைப் போக்கப் பொருளாதாரம் தேடி, சவூதி அரேபிய நாட்டிற்கு மீன்பிடி வேலைக்குச் சென்ற நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த தம்பி பிரவீன்குமார் அவர்கள் அந்நாட்டிலேயே உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். பெற்றெடுத்தப் பிள்ளையை இழந்து ஆற்றோணா வேதனையில் துடிக்கும் தம்பியின் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

பெரும் நம்பிக்கையாக இருந்த தங்களது அன்புமகனை இழந்துவிட்டு பெருந்துயரில் சிக்கியிருக்கும் அவரது பெற்றோர் மகனது உடலை இறுதியாகப் பார்ப்பதற்கு ஏங்கித் தவிப்பதும், வெளிநாட்டிலிருந்து உடலைக் கொண்டுவரப் போராடி வருவதுமான செய்திகள் பெரும் மனவலியைத் தருகின்றன. நெஞ்சில் பெரும் ரணத்தைச் சுமக்கிற கொடுஞ்சூழலில் சவூதி அரேபியா மற்றும் இந்தியத் தூதரகங்களை மாறிமாறி அணுகி மறைந்த மகனின் உடலை வேண்டி நிற்கும் பெற்றோரது துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருங்கொடுமையாகும். பொருளாதாரப் பின்புலமற்ற அக்குடும்பத்தின் பின்தங்கியச் சூழலைப் புரிந்துகொண்டு, தம்பி பிரவீன்குமார் உடலை தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்குரிய பொருளாதாரச்செலவை ஏற்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையும், பொறுப்புமாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் உரியக் கவனமெடுத்து, ஒன்றிய அரசின் மூலம் சவூதி அரேபியாவிலுள்ள தம்பி பிரவீன்குமாரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டு வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளையும், ஏற்பாடுகளையும் விரைந்து முன்னெடுக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி