அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் சார்ந்த அனைத்து பாடங்களையும் பழையபடி முழுமையாக மீண்டும் சேர்க்க தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

223

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் சார்ந்த அனைத்து பாடங்களையும் பழையபடி முழுமையாக மீண்டும் சேர்க்க தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வுக்கான பாடத்திட்டத்திலிருந்து திருக்குறளை நீக்கியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உலகப்பொதுமறையான திருக்குறளை அவமதிக்கும் வகையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியது.

மாநில அரசின் பணியாளர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இனி தான் நடத்தவிருக்கும் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்திலிருந்து உலகப் பொதுமறையாம் திருக்குறளை நீக்கியிருக்கும் இழிச்செயலை சிறிதும் அனுமதிக்க முடியாது.

கடந்த 2019 ஆம் ஆண்டுவரை, அன்றாட வாழ்வில் திருக்குறள் பயன்பாடு, மனித இனத்தில் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கம், சமூகப் பொருளாதார அரசியலில் திருக்குறளின் பங்கு, திருக்குறளில் தத்துவம் எனப் பல்வேறு தலைப்புகளில் பணியாளர் தேர்வுக்கான பாடத்திட்டத்திலிருந்த திருக்குறள் சார்ந்த பகுதிகளை, கிள்ளுக்கீரையாக எண்ணி தேர்வாணையம் நீக்கியிருப்பது, தமிழ்மறை தந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெரும்பாட்டனை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழினத்தையே இழிவுபடுத்தும் கொடுஞ்செயலாகும்.

ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக்கூடங்கள் முதல் கல்லூரிகள் வரை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் திருக்குறளை வெறும் மனப்பாட பகுதியாகக் கற்பிக்கும் மிகத்தவறான அணுகுமுறை நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அற விழுமியங்களின் சாரமாக விளங்கும் திருக்குறளை அதன் முழுமையான மெய்ப்பொருளோடு தமிழிளந்தலைமுறையிடம் கொண்டு சேர்க்கத் தவறியதன் விளைவாகவே குடிப்பெருமை கொலைகள் முதல் பாலியல் குற்றங்கள் வரை நாளுக்குநாள் கொடுங்குற்றங்கள் மிகுந்து ஒட்டுமொத்தச் சமூகமே குற்றச்சமூகமாக மாறிநிற்கும் அவலநிலை நிலவுகிறது.

அவ்வகையில் திருக்குறளை, வெறும் மதிப்பெண்கள் என்ற அலட்சிய மனப்பான்மை காரணமாகவே தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் தனது தேர்வுக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது என்பது தெளிவாகிறது. கடும் எதிர்ப்பு காரணமாக கட்டுரை வரைதல் என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் சேர்க்க முன்வந்திருப்பது ஏற்புடையதல்ல.

ஆகவே, மனிதகுலத்தின் வாழ்வியலுக்கே வழிகாட்டும் தமிழ்மொழி தந்த பெருங்கொடையாம் திருக்குறளை நீக்கியிருக்கின்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தான்தோன்றித்தனமான முடிவை உடனடியாகத் திரும்பப்பெற்று, தேர்வுக்கான பாடத்திட்டத்தில் திருக்குறள் சார்ந்த அனைத்து பாடங்களையும் பழையபடி முழுமையாக மீண்டும் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திமொரப்பூரில் திமுக குண்டர்களின் அட்டூழியத்தைக் கண்டித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமிக்கு நன்றி தெரிவித்த சீமான்
அடுத்த செய்திஇஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை