சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! – சீமான் பத்திரிகையாளர் நாள் வாழ்த்து

64

சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! – சீமான் வாழ்த்து

மக்களாட்சிக்கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிகளுக்கும், ஆட்சி நடத்தும் அரசுக்குமிடையே உறவுப்பாலமாகச் செயல்பட்டு, மக்களின் உளவிருப்பத்தையும், சமூகத்தின் ஆழ்மனக்குரலையும் எதிரொலிக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பங்களிப்பைப் போற்றும் இந்தியப் பத்திரிக்கையாளர் நாள் இன்று!

ஊடகங்கள் என்பவை சமூகத்தின் பிரதிபலிப்பு; மக்களின் முகம் காட்டும் கண்ணாடி. அடித்தட்டு மக்களின் அவலங்களையும், சமகாலத்தில் நடந்தேறும் அநீதிகளையும், மக்களுக்கு நேரும் இன்னல்களையும், ஆதிக்கத்தினால் விளையும் கொடுமைகளையும், அதிகார வர்க்கம் செய்திடும் வன்முறைகளையும், சனநாயகத்துக்கெதிரான அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் என அரசதிகாரத்தின் அத்தனை முகங்களையும் துகிலுரித்து உலகுக்கறிவித்து, மக்களின் துயர்போக்கக் களப்பணியாற்றும் ஊடகங்கள் சனநாயகத்தைக் கட்டிக்காக்கும் பேரரண்களாகும். அந்தப் பெரும்பணியைச் செய்கின்ற ஊடகவியலாளர்களைப் போற்ற வேண்டியதும், அவர்தம் பெரும்பணிகளை அங்கீகரிக்க வேண்டியது குடிமக்களின் தலையாயக் கடமையாகும்.

அண்மைக்காலங்களில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்குமெதிராக ஆளும் அரசுகள் கட்டவிழ்த்துவிடுகிற நெருக்கடிகளும், கருத்துரிமை மீதானத் கோரத்தாக்குதல்களும், அரசப்பயங்கரவாதச் செயல்பாடுகளும் இந்நாட்டின் சனநாயகத்தன்மையையே முற்றிலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. எவ்விதப் பக்கச்சார்புமற்று தன்னிச்சையாகவும், தன்னியல்பாகவும் இயங்கி, சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய ஊடகத்துறை மீது செலுத்தப்படும் இவ்வகை அதிகாரப்பாய்ச்சல்களும், கொடும் அணுகுமுறைகளும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராசில் நடந்தேறிய பாலியல் வன்கொடுமை குறித்தான செய்தியைப் பதிவுசெய்ய சென்ற ஊடகவியலாளர் சித்திக் கப்பன் மீது ஊபா சட்டத்தினைப் பாய்ச்சியது தொடங்கி, திரிபுராவில் ஊடகவியலாளர்கள் சம்ரித்தி, ஸ்வர்ணா ஜா மீது கொடும் அடக்குமுறைச்சட்டங்களை ஏவியதென நாடு முழுமைக்கும் ஊடகவியலாளர்களுக்கெதிரான எதேச்சதிகாரப்போக்குகள் யாவும்
ஊடகச்சுதந்திரத்தைப் பறிக்கும் கொடுங்கோல் நடவடிக்கையாகும்.
ஆகவே, அறநெறி காக்கக் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்துக் களம் காணவும், துணைநிற்கவும் உறுதியேற்போம்!

இந்நாளில், மகத்தான மக்களாட்சிக்கோட்பாட்டினைக் காக்கப் பெரும்பணியாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த பெருமக்கள் யாவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி