அறிக்கை: கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கோவை மாவட்டம், அன்னூரில் புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறிக்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உணவளிக்கும் வேளாண்மையை அழித்து, அதன்மீது தொழிற்சாலைகளைக் கட்ட முயலும் தமிழ்நாடு அரசின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது.
கோவை மாவட்டத்தில் 3,500 ஏக்கர் பரப்பளவில் புதிதாகத் தொழிற்பூங்கா அமைக்க முடிவெடுத்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிலும், குறிப்பாக அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மட்டும் ஏறத்தாழ 2,000 ஏக்கர் வேளாண் நிலங்களை அரசு கையப்படுத்த முயல்வதாக வேளாண் பெருங்குடி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் 900 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்க முயன்றபோதே அன்னூர் பகுதி விவசாயிகளின் கடுமையாக எதிர்ப்புக் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது திமுக அரசு, 2000 ஏக்கர் அளவிற்கு வேளாண் நிலங்களைத் தொழிற்சாலை, வளர்ச்சி என்ற பெயரில் கட்டாயப்படுத்திப் பெற முயல்வது ஏறத்தாழ 50,000 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.
வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுத்த கடுமையான எதிர்ப்புப் போராட்டம் காரணமாக நிலத்தைக் கையகப்படுத்தமாட்டோம் என்று மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஐந்து ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்த கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையும் பொருட்படுத்தாமல், மீண்டும் நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் முயல்வதால் அன்னூர் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையும், அச்சமும் அடைந்துள்ளனர். கோவை அன்னூர் பகுதியில் வேளாண் பெருமக்கள் பன்னெடுங்காலமாக விவசாயம் மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி, விவசாயக்கூலி தொழில்கள் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர். மேலும், வேளாண்மையானது முழுக்க முழுக்கக் கிணற்றுப்பாசனத்தை நம்பியே இருப்பதால், தொழிற்பூங்கா அமைந்தால், விவசாயம் பாதிக்கப்படுவதோடு அதனைச்சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் முற்றாக முடங்கும் பேராபத்து உருவாகும்.
அதுமட்டுமின்றி, அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டல் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் குடிநீர்ப்பஞ்சம் நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு காத்திருந்த சூழலில், தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம் அத்திட்டத்தின் நோக்கமும் சிதையக்கூடும். எனவே, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடிநீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்பூங்கா அமைக்க முயல்வது திமுகவின் இரட்டை வேடத்தையே வெளிக்காட்டுகிறது.
ஆகவே, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை அபகரிக்கும் கொடுங்கொன்மையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இல்லையெல், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன்.
கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!https://t.co/nlKXA8WDJe@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/r2Bou1aunn
— சீமான் (@SeemanOfficial) November 9, 2021
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி