ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிய தம்பி கெபிஸ்டன் மீது கூலிப்படையினரைக் கொண்டு தாக்குதல் தொடுப்பதா? தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நிற்பதா? – சீமான் கண்டனம்

42

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிய தம்பி கெபிஸ்டன் மீது கூலிப்படையினரைக் கொண்டு தாக்குதல் தொடுப்பதா? தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நிற்பதா?
– சீமான் கண்டனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் முறைகேடாகத் திறக்க முயற்சிக்கும் ஆலை நிர்வாகத்தின் செயலுக்கெதிராகப் போராடிய நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தொகுதி இளைஞர் பாசறைச்செயலாளர் அன்புத்தம்பி கெபிஸ்டன் அவர்களை ஆலை நிர்வாகக் கைக்கூலிகள் கொடூரமாகத் தாக்கிய செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். சனநாயக வழியில் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடும் தன்னலமற்ற மண்ணுரிமைப்போராளிகளை வன்முறையின் மூலம் ஒடுக்க நினைக்கும் இக்கொடுஞ்செயல்கள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

அதிமுக ஆட்சியில் ஏவப்பட்ட அரச வன்முறையின் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிய 14 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனபிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் விளைவாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் ஆளும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் துணையுடன் முறைகேடாகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பணத்தை வாரியிறைத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகக் கருத்துருவாக்கம் செய்வது, தங்களை மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவையாளர்களாகக் காட்ட முனைவது, அதற்கு உடன்படாதோரை அடித்துதைத்து மிரட்டுவது, கொலைவெறித்தாக்குதல் தொடுப்பது என ஆலை நிர்வாகம் சட்டத்திற்குப் புறம்பானச்செயல்களில் ஈடுபட்டு வருவது வெளிப்படையாக நடந்தேறி வருகிறது. ஆலை நிர்வாகத்தின் இத்தகைய சட்டவிரோத போக்குகள் குறித்து நாம் தமிழர் கட்சி சார்பாகப் பலமுறை மனு அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான், புகாரளித்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப்போராளியும், நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தொகுதி இளைஞர் பாசறைச்செயலாளருமான அன்புத்தம்பி கெபிஸ்டன் அவர்கள் மீது ஆலை நிர்வாகத்தினர் கூலிப்படையை ஏவி கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதுகுறித்துப் புகாரளித்த பிறகு, கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை பெயரளவிற்குக் கைதுசெய்துவிட்டு, வலுவில்லாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளைத் தொடுத்து உடனடியாகச் சொந்தப்பிணையில் விடுவித்திருப்பது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு முழுமையாகக் காவல்துறையினர் துணைபோவதை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டு திறக்க அனுமதிக்க மாட்டோம் என மக்கள் மன்றத்தில் வாக்குறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தன்வசம் வைத்திருக்கிற காவல்துறை வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக நிற்பதை வேடிக்கைப் பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்பது புரியவில்லை. தங்கை ஸ்னோலினின் உருவப்படத்தைக் காண்பித்து, தேர்தல்களத்தில் பரப்புரைசெய்து வாக்குவேட்டையாடிய திமுக, ஸ்னோலினின் தாயார் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாது காலங்கடத்தி வருவது வெட்கக்கேடானது. இவையெல்லாம் ஆளும் ஆட்சியாளர்கள் மக்களின் எதிர்ப்புணர்வைப் பொருட்படுத்தாமல், அவர்களின் நலத்தின் மீது அக்கறையில்லாமல் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் துணைபோகிறார்களோ? என்கிற பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, அந்நியப்பெருமுதலாளியின் இலாப வேட்டைக்காக, மண்ணின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தானப்போக்கைக் கைவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகச் சட்டமன்றத்தில் நிரந்தரமாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்குத் துணைபோகும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து, தம்பி கெவிஸ்டன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமுல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – சீமான் பேரழைப்பு