போதைப் பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி

336

குஜராத்திலுள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் பிடிபட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகில் எங்குமில்லாத அளவுக்கு அதிகப்படியான அளவில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படும் இப்போதைப்பொருள் வரத்து, கடந்த சூன் மாதத்திலிருந்தே பலமுறை அத்துறைமுகத்தில் நடைபெற்றதாகக் கணக்கிடப்படுகிறது.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் அதானியின் துறைமுகத்தில் கையகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களும், தங்களைத் தேசப்பக்தர்கள் எனக்கூறிக்கொள்ளும் வலதுசாரிகளும் வாய்திறக்க மறுப்பதேன்?

தனது நெருங்கிய நண்பர் அதானியின் துறைமுகத்தில் நடந்தேறிய போதைப்பொருள்கள் கடத்தல் குறித்து திருவாய் மலருவரா பிரதமர் மோடி? ஏன் அமைதிகாக்கிறீர்கள்?

துறைமுகத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்து அதன்வாயிலாகப் போதைப்பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் உங்களது புதிய இந்தியாவா? வெட்கக்கேடு!

குறிப்பாக, இந்திய ஊடகங்கள் இதனைப் பேசப்படு பொருளாக்காது கடந்துசெல்வது ஏனென்று புரியவில்லை. நாட்டையே உலுக்கக்கூடிய ஒரு செய்தி குறித்து ஆளும் ஆட்சியாளர்கள் எவ்விதப் பதிலும் கூறாது அமைதி சாதிக்கையில், மக்களின் மனச்சான்றாய் ஆளும் வர்க்கத்தை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டிய ஊடகங்கள் மொத்தமும் வாய்மூடி நிற்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

எல்லாவற்றையும் தனியார்மயப்படுத்தி, தனிப்பெரு முதலாளிகளின் கைவசம் ஆக்கிவிட்ட நிலையில் அவர்கள் நாட்டை எங்குகொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதற்கு இதுவே சான்று!

தனிப்பெரு முதலாளிகள் இலாபத்தேவையை எதிர்நோக்கி இருப்பார்களே ஒழிய, ஒருபோதும் மக்கள் சேவையை செய்ய முன்வரமாட்டார்கள் எனக்கூறியது இப்போதாவது உரைக்குமா மோடி அரசுக்கு?