தமிழ்நாட்டுக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள எரியெண்ணெய் குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

205

தமிழ்நாட்டுக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள எரியெண்ணெய் குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியில் கடலுக்கடியில் போடப்பட்டுள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited -CPCL) நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்குப் பேரழிவினை ஏற்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்குக் குழாய்கள் பதிக்க முறைகேடாக அனுமதியளித்து, கடலினையும், மீனவர் வாழ்வாதாரத்தையும் நாசப்படுத்தியுள்ள இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, விளை நிலங்களின் வழியே எண்ணெய் குழாய்களைப் புதைத்து நிலத்தை நாசமாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுத்த நிலையில், தற்போது கடலுக்கடியில் புதைத்து சுற்றுச்சூழலையும், மீனவ மக்களின் நலவாழ்வினையும் நாசப்படுத்த முனைந்துள்ளது பெருங்கொடுமையாகும். கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால், நாகூர் மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதுடன், கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் உயிரிழக்கும் பேராபத்தும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பேரழிவிற்கான முழுப் பொறுப்பையும் ஆளும் அரசுகளே ஏற்க வேண்டும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ்நாட்டுக் கடற்பகுதியில் குழாய்கள் பதிக்க எரிஎண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதுடன், கடலுக்கடியில் புதைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநமக்கு வாக்களித்த ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் காப்பாற்ற, ஒன்றுக்கு ஆயிரம் மடங்காக இன்னும் வீரியமாக களத்தினில் உழைப்பினைச் செலுத்த அணியமாவோம்! 
அடுத்த செய்திவாழ்வாதார உரிமைகளைப் பெற தொல்தமிழ் குறவர்குடி மக்களுக்குத் தங்கு தடையின்றிக் குடிச்சான்றிதழ் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்