எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய ஐயா தா. பா.வின் இழப்புத் தமிழ் அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்

762

எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய ஐயா தா. பா.வின் இழப்புத் தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் இரங்கல்

எழுபது ஆண்டுகால அரசியல் பொதுவாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்காகவே வாழ்ந்திட்ட பொதுவுடைமைச்சுடர், மாமேதை மார்க்ஸ் கனவு கண்ட மனிதகுல மறுமலர்ச்சியைத் தமிழ் மண்ணில் மலரச் செய்திட வேண்டுமென உழைத்திட்டக் கொள்கைப்பற்றாளர், தொழிலாளர் நலனுக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய களப்போராளி, தமிழக அரசியல் களத்தில் பொதுவுடைமையை விதைத்திட்டப் பிதாமகன் ஐயா ஜீவானந்தம் அவர்களது வழிநின்று பொதுவுடைமைத் தத்துவம் நிலைபெறப் போராடியத் தகைமையாளர், உலகளாவிய பொதுவுடைமைத் தத்துவத்தைத் தமிழக வீதிகளுக்குக் கொண்டுவந்து தந்திட்டப் பேரறிஞர், மாற்றுக்கட்சியினரையும் மதித்துப் போற்றும் மாண்பாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா தா. பாண்டியன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவரது இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் பெருமக்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

 

ஈழ விடுதலையை இறுதிவரை உறுதியாக ஆதரித்து நின்ற பெருமகன் ஐயா தா.பா.
ஆவார். இறப்பதற்கு முன் ராஜீவ் காந்தியோடு களத்தில் இருந்து காயமுற்ற அவர், அவ்வழக்கில் சிக்கிண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் விடுதலைக்காகக் குரல்கொடுத்தவர். எத்தகைய காலக்கட்டத்திலும் எந்த நெருக்கடித் தருணத்திலும் தனது உள்ளத்தில் பட்டதை நெஞ்சுரத்தோடு உரைக்கிற பேராண்மையாளர். தனது வெண்கலக் குரலில் அழுத்தம் திருத்தமாகத் தெள்ளு தமிழில் உரையை நிகழ்த்திக் கேட்போரைக் கருத்து செறிவால் கட்டிப்போடும் தனித்துவம் மிக்கப் பேராற்றல் கொண்ட பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் என இருமொழி இலக்கியங்களிலும் கரைகண்ட ஐயா தா.பா அவர்கள் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்களை எழுதிய மிகச்சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். கட்சிப் பொறுப்புகள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர், பத்திரிக்கை ஆசிரியர், தொழிற்சங்கத்தலைவர், தமிழ்நாடு கலை, இலக்கியப் பேரவைத் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளைத் திறம்படச் செய்து பன்முகத்திறனோடு விளங்கியவர். எழுத்து, பேச்சு மட்டுமல்லாது களத்திலும் ஆளுமையோடு ஆளுகை செய்த ஐயா தா.பா அவர்களது இழப்பு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பு.

ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி