போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

363

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாது, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தமிழக அரசு அலட்சியப்போக்கோடும், அதிகாரச்செருக்கோடும் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த 18/02/2021 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஓரிரு நாட்களில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் தற்போதுவரை அந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றித் தராதது ஏன்? போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படுமென்று போக்குவரத்து ஊழியர்களைக் கலந்தாலோசிக்காமல் அமைச்சர் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது ஏன்? போக்குவரத்துத் தொழிலாளர்களோடு தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகப் பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியும் இதுவரை அவர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வழங்காததன் விளைவாகவே அவர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி ஊதிய உயர்வை வழங்குவதோடு, அரசு போக்குவரத்துக் கழங்கங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம், பணப்பலன் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் ஏற்படும் காலத் தாமதத்தைச் சரிசெய்து, இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ள புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை. நாம் தமிழர் கட்சி அவர்களின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறது.

அரசுப் பொதுப் போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ள ஏழை எளிய தொழிலாளிகள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள் மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினரும் தற்போதைய முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுபோன்ற சூழல்களில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாநில போக்குவரத்து ஊழியர்களிடம் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தந்து பாமர மக்கள் பாதிப்படையாமல் காத்தது.

ஆகவே தமிழக அரசு, போராடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்துவதைக் கைவிட்டு, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து ஊழியர்களுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முன்வரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவெல்லப்போறான் விவசாயி! – நாம் தமிழர் தேர்தல் பரப்புரைக்காக டென்மார்க் வாழ் தமிழர் தயாரித்த பாடல் காணொளி
அடுத்த செய்திஎழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய ஐயா தா. பா.வின் இழப்புத் தமிழ் அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்