நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுத் திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி! – சீமான்

7057

நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி! – சீமான்

ஐவகைத் திணை நிலங்களில் தலைநிலமான குறிஞ்சித்திணையின் தலைவனும், தமிழர் இறைவனுமாகிய, எம்மின மூதாதை முருகப்பெருந்தகையைப் போற்றித் தொழும் திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்ற தமிழர்களின் இறையாண்மை சார்ந்த, உலகத்தமிழர்கள் உணர்வுப்பூர்வமான கோரிக்கையை உள்வாங்கி நீண்ட நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் பரப்புரையும், போராட்டமும் செய்து வருகிறது. இக்கோரிக்கையை, முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ச்சியாக முன்வைத்தேன். கடந்தாண்டு மாண்புமிகு முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். கட்டாயம் பரிசீலிக்கிறேன் என்று என்னிடம் உறுதி தந்தார். அதன்படி,  இன்று அந்நாளை அரசு விடுமுறையாக மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்திருப்பதற்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வறிவிப்பானது உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

தமிழ்நாடு நாள் அறிவிப்பு, ஏழு தமிழர் விடுதலைத் தீர்மானம் மற்றும் அவர்களின் சிறைவிடுப்பு, ஏழை மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு, இன்று அறிவித்திருக்கும் திருமுருகத் திருநாளுக்கு அரசு விடுமுறை எனத் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் வரலாற்று சிறப்புமிக்கவை. அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் யாரும் நிறைவேற்ற முன்வராத பொழுது தற்பொழுது ஒரு தமிழ்மகன் ஆள்கையில் தொடர்ச்சியாக அவைகள் நிறைவேறுவது, தமிழ் மண்ணைத் தமிழர் ஒருவர் ஆள்வதே அனைத்திற்குமான தீர்வு என்பதையே காட்டுகிறது. தமிழர்களின் உள்ளம் மகிழ்ந்து பாராட்டுகளைப் பெறும் இத்தகைய போற்றத்தக்கச் செயல்பாடுகள் தொடர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள மாநிலத்திலுள்ள தமிழர் பகுதிகளான இடுக்கி, பீர்மேடு போன்றவற்றில் வாழும் தமிழர்களும் திருமுருகத்திருநாளை கொண்டாடக்கூடிய வகையில் கேரள மாநிலத்திலும் அரசு விடுமுறை விடவேண்டுமென அம்மாநில முதல்வர் ஐயா பினராயி விஜயன் அவர்களையும், தமிழர்களின் இன்னொரு தாய்நிலமாக விளங்கக்கூடிய புதுச்சேரி மாநிலத்தில் திருமுருகத்திருநாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் ஐயா நாராயணசாமி அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்களின் பெருந்தெய்வமான முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் திருநாளான திருமுகத்திருநாளை பேரெழுச்சியோடு கொண்டாட வேண்டுமென உலகெங்கிலும் வாழும் தமிழர்களை உரிமையோடும், பேரன்போடும் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் – விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி விண்ணப்பம்
அடுத்த செய்திவாணியம்பாடி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் தெருமுனை பரப்புரை