பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

85

பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

கடந்த பத்தாண்டுகளாகச் சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றிப் பணிநீக்கம் செய்துள்ள தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் வயிற்றிலடித்து அவர்களது வாழ்வாதாரத்தை நசுக்கும் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரு தேசத்தில் வாழும் மக்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவர்களைப் போல, உடைமைகளைக் காக்கும் காவலர்களைப் போல, நாட்டு மக்கள் நலமாக வாழ ஒவ்வொரு நாளும் இடைவிடாது தூய்மைப்படுத்திக் காக்கும் தூய்மைப் பணியாளர்களும் போற்றுதலுக்குரியவர்களே! மற்றவர்கள் முகம் சுளித்து, வெறுத்து ஒதுக்கும் பொருட்களை அர்ப்பணிப்புணர்வுடன் தூய்மைப்படுத்தும் பெருமதிப்புமிக்க அவர்களின் மகத்தான பணியென்பது தலைவணங்கி, வாழ்த்தும் தகுதி உடையது. மருத்துவர்கள், காவலர்கள் போலத் தூய்மைப் பணியாளர்கள் பணியும் நேரகாலம் பாராது தொடர்ந்து இயங்கும் பணியாகும். பேரிடர் காலத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செய்யக்கூடிய பணியாகவும் உள்ளது. அத்தகைய போற்றுதற்குரிய தூய்மைப் பணியாளர்களை, பத்தாண்டுக்காலமாகக் குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருந்து, உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணிநீக்கம் செய்திருப்பதென்பது, அவர்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தும் செயல் மட்டுமின்றி அவர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஏற்கனவே, பத்தாண்டுகள் பணியாற்றியும், பணி நிரந்தரம் செய்யப்படாமையால் அரசு வழங்கக்கூடிய குழு காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட இதர உரிமைகள் எதுவும் முறையாகக் கிடைக்காத சூழலே நிலவுகிறது. கொரொனா நோய்த்தொற்றுக் காலத்தில் வழங்கப்பட்ட பேரிடர் காலச் சிறப்பு ஊக்கவூதியம் கூடக் கிடைக்காததால், அதிகப் பணிச்சுமையுடன் மனச்சுமை மற்றும் பொருளாதாரச் சுமையும் சேர்ந்து தளவுர்வுற்ற நிலையிலும் பணியிலிருந்து பின்வாங்காமல், தொடர்ந்து ஓய்வின்றிப் பணியாற்றி வந்தனர். மக்களின் உடல்நலத்தையும், சுற்றுப்புற தூய்மையையும் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் உழைக்கும் அத்தகைய ஒப்பற்ற ஈகர்களின் பணியின் மாண்பை உணர்ந்து அவர்களை மேலும் சோர்வுறாது பணியாற்றும் வகையில், பணி நிரந்தரம் செய்து சமமான ஊதியம் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்க வேண்டிய அரசு, திடீரெனப் பணிநீக்கம் செய்திருப்பது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்றதாகும்.

எனவே, பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களின் நெடுநாள் நியாயமான கோரிக்கைகளான பணிநிரந்தரம், சரியான, சமமான ஊதியம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், தூய்மைப் பணியாளர்களைப் பணியமர்த்துவதை முற்றுமுழுதாக தனியார் பெருநிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகரச் ‘சென்னை மாநகராட்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு’ சார்பில் நாளை (29-01-2021) முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி துணைநிற்கும் எனவும் உறுதியளிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி